கோபி நகராட்சியில் திட்ட பணிகளுக்காக 'வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுகிறோம்'; கவுன்சிலர் கேள்விக்கு தலைவர் பதில்
கோபி நகராட்சியில் திட்டப்பணிகளை நிறைவேற்ற வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுகிறோம் என்று கவுன்சிலர் கேள்விக்கு தலைவர் பதில் அளித்தார்.
கடத்தூர்
கோபி நகராட்சியில் திட்டப்பணிகளை நிறைவேற்ற வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுகிறோம் என்று கவுன்சிலர் கேள்விக்கு தலைவர் பதில் அளித்தார்.
நகராட்சி கூட்டம்
கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. என்ஜினீயர் சிவக்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தலைவர் அளித்த பதில் வருமாறு:-
ப்ரினியோகணேஷ் (அ.தி.மு.க.):- நகராட்சியில் பொது நிதி எவ்வளவு உள்ளது? எங்களுடைய வார்டில் அந்த நிதியிலிருந்து எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.
தலைவர்:- திட்டப்பணிகள் நிறைவேற்ற வாங்கிய கடனுக்காக வட்டியை கட்டி வருகிறோம். மாவு இருந்தால்தான் தோசை சுட முடியும். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். பொது நிதி வந்த பிறகு உங்கள் வார்டில் பணிகள் நடைபெறும்.
உடலை புதைக்க...
சுமையா பானு (அ.தி.மு.க.):- எங்கள் வார்டில் புதிய தெருவிளக்கு இணைப்புகள் இன்னும் தரப்படவில்லை. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மாலை நேரத்தில் செல்ல மிகவும் அச்சப்படுகிறார்கள்.
தலைவர்:- புதிய தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகராஜ் (அ.தி.மு.க):- கரட்டூர் மயானத்தில் முட்புதர்கள், செடிகள் அதிகமாக உள்ளன. உடலை புதைக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்:- முட்புதர்கள் அகற்றப்படும்.