உப்பள தொழிலாளர்களுக்குஅடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்:கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் மழைக்கால நிவாரண உதவிபெறுவதற்கு தொழிலாளர் நலத்துறைமூலம் உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் மழைக்கால நிவாரண உதவிபெறுவதற்கு தொழிலாளர் நலத்துறைமூலம் உப்பள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
கலந்துரையாடல்
தூத்துக்குடி ராஜபாண்டிநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உப்பள தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி உப்பள தொழிலாளர்களிடம், அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது உப்பள தொழிலாளர்கள் பேசும் போது, மழைக்கால நிவாரணம் கிடைத்து உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கிறோம். அதே நேரத்தில் குறைந்த அளவிலான தொழிலாளர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்து உள்ளது. ஆதார் எண்ணுடன் செல்போன் இணைக்காமல் இருத்தல், வங்கி கணக்கு விவரம் சரியில்லாததாலும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் நிவாரணம் பெறுவதற்கு யாரை அணுகுவது என்று தெரியவில்லை. இதற்கு ஒரு முகாம் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்ஷன் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் நலவாரிய அட்டை வழங்க வேண்டும். உப்பளங்களில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ராஜபாண்டி நகர் பகுதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.
மருத்துவ முகாம்
இதற்கு பதிலளித்து கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில், . தமிழ்நாட்டின் 70 சதவீத உப்பு உற்பத்தி தூத்துக்குடி மாவட்டத்தில்தான் நடக்கிறது. மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உப்பளங்கள் உள்ளன. உப்பளத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். உப்பள தொழிலாளர்களுக்கு வருகிற 6, 7-ந் தேதிகளில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் துறையின் முயற்சியுடன் சங்கர நேத்ராலயா போன்ற தனியார் ஆஸ்பத்திரிகளுடன் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம்கள் 9 இடங்களில் நடத்தப்பட உள்ளது. முகாம்களில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் பொதுவான உடல் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்குவதற்கும், கண்ணாடிகள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும்.
சிறப்பு முகாம்
தமிழக அரசின் மழைக்கால நிவாரணம் பெறுவதற்கு தொழிலாளர் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்குவதற்கும், ஆதார் எண் இணைப்பதற்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உப்பளங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும், ஏற்கனவே அடிப்படை வசதிகள் உள்ள உப்பளங்களில் முறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்கள் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அயோடின் முக்கியமானது. அங்கன்வாடி மையம் விரைந்து அமைக்கப்படும். நடமாடும் ரேஷன் கடை மூலம் உடனடியாக பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
தொடர்ந்து ராஜபாண்டிநகர் பகுதியில் உள்ள உப்பளங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டத்தில் தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில இணை செயலாளர் மா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் உப்பள தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.