உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படுமா?


உப்பள தொழிலாளர்களுக்கு  தனி நலவாரியம் அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படுமா? என்று தொழிலாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படுமா? என்று தொழிலாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

உப்பள தொழில்

இந்தியாவின் உப்புத்தேவையை பூர்த்தி செய்வதில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மற்ற கடலோர மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரையிலான கடலோர பகுதிகளில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி தொழில் நடந்து வருகிறது.

50 ஆயிரம் தொழிலாளர்கள்

உப்பள தொழிலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படுத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்த தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தனி நலவாரியம்

இதுகுறித்து தூத்துக்குடி முடுக்குகாட்டை சேர்ந்த உப்பள தொழிலாளி ராமலட்சுமி கூறியதாவது:-

உப்பள தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கை தனி நலவாரியம் வேண்டும் என்பது ஆகும். தற்போது உப்பள தொழிலாளர்கள் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம் மூலம் உதவித்தொகை பெற விண்ணப்பித்து வருகிறோம். ஆனால், அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விடுகிறது.

கடந்த ஆண்டு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்த மனுக்களுக்கு இந்த ஆண்டு வரை உதவித்தொகை கிடைக்காத நிலை உள்ளது. ஆகையால் கட்டுமான தொழிலாளர்கள் போன்று, உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். அப்போதுதான், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகளை எளிதில் பெற முடியும்.

கழிவறை வசதி

உப்பளத்தில் அதிகளவில் பெண்கள் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் சுமை தூக்குதல், பாத்தி மிதித்தல், உப்பு வாறுதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நீண்ட நேரம் நின்று வேலை பார்ப்பதால், கால்கள் பொத்து விடுதல், முடி உதிர்தல், கர்ப்பப்பை இறக்கம், குடல் இறக்கம் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இதனால் உப்பள தொழிலாளர்களுக்காக ஒவ்வொரு மாதமும் தனியாக சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

உப்பளங்களில் கழிவறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஒரு சில உப்பளங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பல உப்பளங்களில் கழிவறை வசதி இல்லை. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். பணியின்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்பார்ப்பு

தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்த கனி கூறும்போது, உப்பள தொழிலாளர்கள் நீண்ட நேரம் வேலை பார்க்கும் சூழல் உள்ளது. ஆனால் அவர்களுக்கு போதுமான சம்பளம் இல்லை. உப்பள தொழிலாளர்களுக்கு கால் பிரச்சினை, கண்பார்வை பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் தரமான உபகரணங்கள் வழங்க வேண்டும். உப்பளங்களில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கான வசதிகள் கூட இல்லை. உப்பளங்களில் பெண்கள் அதிக அளவில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதியும் இல்லை. ஆகையால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். உப்பள தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தால் பென்சன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் விரைவாக தொழிலாளர்களுக்கு கிடைப்பதற்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். இதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என்று கூறினார்.

கீழவைப்பாரை சேர்ந்த சிறு உப்பு உற்பத்தியாளர் மாரியம்மாள் கூறும் போது, 'நாங்கள் தாத்தா காலத்தில் இருந்து சிறிய அளவில் உப்பளம் அமைத்து உப்பு உற்பத்தி செய்து வந்தோம். நாங்கள் அந்த உப்பளத்தில் வேலைபார்த்து வந்தோம். இதில் கிடைத்த வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தோம். இந்த நிலையில் நீர்வழிப்பாதையில் உப்பளம் இருப்பதாக கூறி அரசு உப்பளத்தை கையகப்படுத்தி விட்டது. இதனால் கடந்த 6 மாதமாக தொழில் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். கூலிவேலைக்கு தான் சென்று வருகிறோம். இதனை கொண்டு எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க கூட முடியாத நிலை உள்ளது. ஆகையால் அரசு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பளங்களில் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்' என்று கூறினார்.


Next Story