ராஜாக்கமங்கலம் அருகே ஆம்புலன்சை தடுத்து நிறுத்தியதால் முதியவர் உயிரிழந்த சோகம்


ராஜாக்கமங்கலம் அருகே   ஆம்புலன்சை தடுத்து நிறுத்தியதால்  முதியவர் உயிரிழந்த சோகம்
x

ராஜாக்கமங்கலம் அருகே ஆம்புலன்சை தடுத்து நிறுத்தியதால் முதியவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே ஆம்புலன்சை தடுத்து நிறுத்தியதால் முதியவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 3 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தம்

ராஜாக்கமங்கலம் அருகே பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் நளன் (வயது 72). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கிடங்கன்கரைவிளையில் உள்ள தனது மருமகன் சுயம்புலிங்கம் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை திடீரென நளனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் கிடங்கன்கரைவிளையில் உள்ள முதியவர் வசிக்கும் வீட்டின் அருகே வந்த போது, அந்தப் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் அந்த வீட்டிற்கு செல்லக்கூடாது என்று ஆம்புலன்சை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் வர அரை மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆனது.

முதியவர் சாவு

பின்னர் ஒரு வழியாக ஆம்புலன்ஸ் டிரைவர் அங்கிருந்து முதியவர் வீட்டுக்கு வந்தார். அதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் முதியவரை அவசர, அவசரமாக ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் முதியவர் இறந்து விட்டார்.

ஆம்புலன்சை 3 வாலிபர்கள் தடுத்து நிறுத்தி காலதாமதம் செய்ததால் தான் முதியவர் இறந்தார் என்று கூறி அந்த பகுதியில் மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசில் புகார்

இந்த சம்பவம் குறித்து சுயம்புலிங்கம் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், 'என் மாமனார் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் உயிரை காப்பாற்ற வந்த ஆம்புலன்ஸை 3 வாலிபர்கள் தடுத்ததால் காலதாமதம் ஆகி அவர் இறந்து போனார். தட்டி கேட்க சென்ற தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும்' கூறி உள்ளார். அந்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story