மாணவ, மாணவிகளுக்கு இலவச ஓவிய பயிற்சி முகாம்
தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச ஓவிய பயிற்சி முகாம் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் சவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தை முன்னிட்டு 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி முகாம்கள் நடத்தவும், அதனை தொடர்ந்து சென்னையில் மாநில அளவிலான கண்காட்சி நடத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவிய பயிற்சி முகாம்களில் மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், பேப்பர் ஓவியங்கள், பனை மர ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம் பெறும் வகையில் நடத்தப்பட உள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச ஓவிய பயிற்சி முகாம் வருகிற 23-ந்தேதி தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. அதில், மாணவ, மாணவியர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப்படும் சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும். இதில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் பயிற்சி பெறுபவர்களுருக்கு வரைபட அட்டை வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்கள் வரைபட பொருட்கள், மதிய உணவு எடுத்து வர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.