தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு15-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் கோரிக்கை
கொடிவேரி அணைக்கட்டு திட்ட அரக்கன்கோட்டை வாய்க்கால் முறை நீர் பாசன விவசாய சங்கத்தினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பவானிசாகர் அணைக்கோட்ட செயற்பொறியாளரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து கொடிவேரி அணைக்கட்டு திட்ட அரக்கன்கோட்டை வாய்க்கால் முறை நீர் பாசன விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதியில் முதல் போக நெல் சாகுபடி செய்ய ஏதுவான பருவம் ஏப்ரல் மாதம் 2-வது வாரம் ஆகும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால் மற்றும் மதகு சீரமைக்கும் பணி நடந்ததால் இந்த பருவத்துக்கு தண்ணீர் பெற முடியவில்லை.
பருவம் தவறி தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடுவதால் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
அதுபோக நேரடி கொள்முதல் நிலையங்களில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள 17 சதவீதத்துக்கு மேலாக நெல்லில் ஈரப்பதம் உள்ளதால் நெல்மணிகள் வீணாகும் சூழல் உள்ளது. இதனால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை எடை போட முடியாமல் தவிக்கின்றனர். எனவே பவானிசாகர் அணையில் 90 அடி நீர்மட்டம் இருக்கும் சூழலில் எங்களது பழைய பாசனங்களான தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப்பகுதிக்கு வருகிற 15-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
இவ்வாறு விவசாய சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.