ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை(செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும்.
இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னுரிமை
நாகை மாவட்டம் கருவேலங்கடை, திருக்கண்ணபுரம், வங்காரமாவடி, வெட்டியக்காடு, ஏர்வைக்காடு ஆகிய அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் தலா 1 ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர், வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன், ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நாளை கடைசி நாள்
மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள் முதல் வருகிற ஏப்ரல் மாதம் 2024-ம் ஆண்டு வரையில் நியமனம் செய்யப்படுவார்கள். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எழுத்து மூலமான விண்ணப்பத்தை உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண் 6-ல் இயங்கி வரும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.