இறந்த 9 பேரின் குடும்பங்களுக்காகரூ.65 லட்சம் நிதி திரட்டி வழங்கிய போலீசார்
இறந்த 9 போலீசாரின் குடும்பங்களுக்காக போலீசார் ரூ.65 லட்சம் நிதி திரட்டி வழங்கினர்.
தமிழக போலீஸ் துறையில் 1993-ம் ஆண்டு சுமார் 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல பதவிகளில் உள்ளனர். அவர்களில் சுமார் 3,500 பேர் "காக்கும் கரங்கள்" என்ற பெயரில் குழுவாக இணைந்து, பணியின் போது உயிரிழக்கும் போலீசாருக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீசாரில் 9 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். அதில், சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சுதாகர் என்பவரும் ஒருவர். இதையடுத்து உயிரிழந்த 9 போலீசாரின் குடும்பத்திற்காகவும் போலீசார் தங்களுக்குள் நிதி திரட்டினர். அந்த வகையில் மொத்தம் ரூ.65 லட்சம் திரட்டினர். அந்த நிதியை ஒவ்வொரு போலீசாரின் குடும்பத்திற்கும் ரூ.7 லட்சத்து 22 ஆயிரத்து 500 வீதம் வழங்கினர்.
அதன்படி சின்னமனூர் சுதாகர் குடும்பத்தினரிடம் இந்த நிதியை காக்கும் கரங்கள் குழுவை சேர்ந்த தமிழரசன், சத்தியமூர்த்தி, பாரதி முருகன், கோபால், சுதாகரன், சீமான், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் வழங்கினர். அதுபோல் மற்ற போலீசாருக்கும் அந்தந்த பகுதியை சேர்ந்த போலீசார் மூலம் நிதியை வழங்கினர். இதுகுறித்து காக்கும் கரங்கள் குழுவை சேர்ந்த போலீசார் கூறுகையில், "இதுவரை மருத்துவ மற்றும் உயிர்காப்பு நிதியாக ரூ.11 லட்சத்து 78 ஆயிரமும், இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு நிதியாக ரூ.3 கோடியே 71 லட்சமும், மொத்தம் ரூ.3 கோடியே 82 லட்சம் அளவில் நிதி திரட்டி வழங்கியுள்ளோம்" என்றனர்.