கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் முழுமையாக குடிநீர் வழங்க நடவடிக்கை-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தகவல்
கடைக்கோடி பகுதியில் இருக்கும் மக்களுக்கும் முழுமையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.
சாயல்குடி,
கடைக்கோடி பகுதியில் இருக்கும் மக்களுக்கும் முழுமையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 60 ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். கடலாடி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் வரவேற்றார். கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) பிரவீன்குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் நாராயண சர்மா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பரமசிவம், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசும்போது கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் பொதுவாக வறட்சி மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு பகுதிக்கு அதாவது கடைக்கோடி பகுதிகளுக்கு முழுமையாக செல்வதில்லை என தெரிகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு முழுமையாக அளவு தண்ணீர் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஒருங்கிணைந்து அப்பகுதி பொதுமக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி திட்டமிட்டபடி பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி 2054-ம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு போதிய அளவு தண்ணீர் பெற்று பயன்பெறும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திட்டமிடுதல்
பின்னர் நீர்வள ஆதார திட்ட துறையின் விஞ்ஞானிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து விளக்க உரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்த திட்டத்திற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டு இருந்த உடன் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை முதன்மை அலுவலர் நந்தகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சண்முகநாதன், ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் தென்னரசி செல்ல பாண்டியன், ஊராட்சித் தலைவர்கள் ராஜேந்திரன், ஜெயலட்சுமி வடமலை, மங்களசாமி, லிங்கராஜ், காளிமுத்து, ராஜமாணிக்கம் லிங்கம், இக்பால், முத்துமாரி, மீனாள் தங்கையா, கன்னியம்மாள் சண்முகவேல், பீர்முகம்மது, மகரஜோதி கோபாலகிருஷ்ணன், லட்சுமி திருவாப்பு, பாலகிருஷ்ணன், வீரபாண்டியன், சுப்பிரமணியன், நாராயணன், சொரிமுத்து, முருகன் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர். கடலாடி ஒன்றிய ஆணையாளர் ஆணையாளர் ஜெய ஆனந்தன் நன்றி கூறினார்.