சிவில் சர்வீஸ் தேர்வில் வனத்துறை அதிகாரி பதவிக்கு மாநில அளவில் முதலிடம் பிடித்து அம்மாபேட்டை வாலிபர் சாதனை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்
மாநில அளவில் முதலிடம் பிடித்து அம்மாபேட்டை வாலிபர் சாதனை
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் சென்னம்பட்டி ஜர்த்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவருடைய மனைவி ஹேமலதா. இவர்களுடைய மகன் கிருபானந்தன் (வயது 32). இவர் தனது பள்ளிப்படிப்பை பத்தாம் வகுப்பு வரை கோபி தனியார் பள்ளிக்கூடத்திலும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் குப்பாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்திலும் படித்தார். பின்னர் கல்லூரி படிப்பை கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியிலும் படித்தார். என்ஜினீயரான அவர் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையில் உள்ள தனியார் சிவில் சர்வீஸ் அகாடமியில் சேர்ந்து அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் 2021- 2022 சிவில் சர்வீஸ் தேர்வில் வனத்துறை அதிகாரி பதவிக்கு இவர் இந்திய அளவில் 16-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். அவருடைய அண்ணன் தயானந்தன் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று வருமான வரித்துறையில் இணை ஆணையாளராக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி ஆகிய 2 பேரும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி உயர் பதவியில் வெற்றி பெற்று உள்ளதை அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.
இதுகுறித்து கிருபானந்தன் கூறுகையில், 'மாணவர்கள் தொடர்ந்து விடாமுயற்சியுடன் படித்தால் எதையும் சாதிக்கலாம். மேலும் தமிழக அரசு மாணவ- மாணவிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சலுகைகளை முறையாக பயன்படுத்தி எந்த ஒரு தேர்வையும் எழுதி எளிதில் வென்றுவிடலாம்,' என்றார்.