மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்காக அரசு, தனியார் பள்ளி-கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு


மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்காக  அரசு, தனியார் பள்ளி-கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்  மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு
x

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்

ஈரோடு

அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தமிழ் புலிகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சிந்தனை செல்வன், சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

கண்காணிப்பு கேமரா

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தநிலை நீடித்தால் மாணவ-மாணவிகளின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும். எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மாவட்ட கலெக்டரின் தலைமையில் குழு அமைத்து மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு குறித்த தகவல்களை சேகரித்து குற்றம் நடைபெறாத வகையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் குடும்ப சூழ்நிலை காரணமாக இடையில் கல்வி கற்காமல் சிலர் நின்று விடுகிறார்கள். அந்த மாணவர்கள் போட்டித்தேர்வுகள் எழுதுவதற்கு கல்வி சான்றிதழ் தேவைப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துக்கு சென்று கேட்கும்போது முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், ஏழை மாணவ-மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். ஏற்கனவே கட்டணம் செலுத்த முடியாததால் அவர்கள் கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டார்கள். தற்போது சான்றிதழுக்காக முழு கட்டணம் கேட்பதால் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே கல்வி சான்றிதழ்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

காத்திருப்பு போராட்டம்

கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு கொடுப்பதற்காக துய்மை பணியாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பணி வரன்முறை செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள்.

மின் கட்டண உயர்வு

தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில், 'தமிழக அரசு, மின்கட்டணத்தை உயர்த்த நினைப்பது கண்டிக்கத்தக்கது. இதேபோல் பொதுமக்களை பாதிக்கக்கூடிய வீட்டு, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்' என கூறியிருந்தனர்.

மொடக்குறிச்சி அருகே புஞ்சைகாளமங்கலம் திருவள்ளுவர் காலனி, வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்", என்று கூறிஇருந்தனர்.

ஆக்கிரமிப்பு

குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் சந்திரசேகரன் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'அந்தியூர் வேடர் காலனியில் வீரமாத்தியம்மன் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 206 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா சம்பந்தப்பட்ட அதிகாாிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குமரன், மாவட்ட வழங்கல் அதிகாரி இலாஹிஜான், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மீனாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

-----------


Next Story