பழங்குடியின பெண் மருத்துவருக்கு தேசிய தன்வந்திரி விருது
கோத்தகிரியை சேர்ந்த பழங்குடியின பெண் மருத்துவருக்கு தேசிய தன்வந்திரி விருதை மத்திய கலாச்சாரத்துறை வழங்கியது.
கோத்தகிரி
கோத்தகிரியை சேர்ந்த பழங்குடியின பெண் மருத்துவருக்கு தேசிய தன்வந்திரி விருதை மத்திய கலாச்சாரத்துறை வழங்கியது.
பாரம்பரிய மருத்துவம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியின கிராமமான கரிக்கையூர் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள். இவர் தனியார் அறக்கட்டளை ஒன்றுடன் இணைந்து பண்டைய பழங்குடியினரின் மூலிகை அறிவை புதுப்பிக்கும் திட்டத்தில் பணிபுரிந்து வருவதுடன், மூலிகை மருந்து உற்பத்திக்குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.இந்தநிலையில் அவர் பெங்களூருவில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத பார்வை-2047 என்ற தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் மாநாடு, கருத்தரங்கம், கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமில் பங்கேற்றார். இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து பாரம்பரிய மருத்துவ திட்டத்தின் மேலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 20 மருத்துவர்கள் உள்பட நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய விருது
இதில் பழங்குடியின கிராமங்களில் பாரம்பரிய மருத்துவ பணியை சிறப்பாக செய்து வரும் காளியம்மாளுக்கு மத்திய கலாச்சாரத்துறையின் சார்பில் தேசிய அளவிலான 'தன்வந்திரி' விருதை தலைவர் டாக்டர் ஹரிராமமூர்த்தி வழங்கினார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தொல்லை தூர கிராமங்களின் சுகாதார சேவையில் பாரம்பரிய மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இயற்கை மூலிகைகளை கொண்டு சிகிச்சை செய்யும் பாரம்பரிய மருத்துவம் பக்க விளைவுகள் இல்லாதது. இந்த மருத்துவத்தை மேம்படுத்த தமிழக அரசு உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது என்றனர்.