மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7.33 கோடி கடன் தள்ளுபடி சான்றிதழ்-சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
வள்ளியூர், ராதாபுரம் யூனியனில் மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7.33 கோடி கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
வள்ளியூர்:
வள்ளியூர், ராதாபுரம் யூனியனில் மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7.33 கோடி கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
சான்றிதழ் வழங்கும் விழா
வள்ளியூரில் மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அழகிரி வரவேற்றார். வள்ளியூர், ராதாபுரம் யூனியனில் உள்ள 1,886 உறுப்பினர்களை கொண்ட 155 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 7.33 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை சபாநாயகர் அப்பாவு வழங்கி பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் சாமானிய மக்களை பற்றி சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் மகளிர் சுய உதவி குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு வங்கிகள் மூலம் கடன் பெற்று பல குடும்பங்கள் சிறந்து விளங்கி வருகிறது. வாங்கிய கடனை திரும்ப செலுத்தும் ஒரே குழு மகளிர் சுய உதவி குழுக்கள் மட்டும்தான். அதனால்தான் முதல்-அமைச்சர், மகளிர் சுய உதவி குழுவிற்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
சிறந்து விளங்குகிறது
தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் தான் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக திட்டங்களும், சலுகைகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சராசரி பெண்களின் முன்னேற்றத்திற்காக தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தனர். எல்லா மாநிலங்களை விட பெண்கள் முன்னேற்றத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பெண்களுக்கு சம உரிமை வழங்கி பெருமைப்படுத்தியவர்கள் திராவிட கட்சிகள் தான்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 605 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். விரைவில் வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைய இருக்கிறது. சாதி, மதம், இன பேதமின்றி சாமானிய மக்களுக்கு எல்லா திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, வருவாய் அலுவலர் கனகசுந்தரி, நாங்குநேரி ராதாபுரம் தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் மன்னர் ராசா, சார்பதிவாளர்கள் தினேஷ், கோயில்மணி, செல்வகுமார், ஆனந்தராஜா, மேலாளர் தமிழ்ச்செல்வன், வள்ளியூர் நகர பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணைச் செயலாளர் நம்பி, நிர்வாகிகள் ஆதிபாண்டி, ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.