பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் புகார் மனு அளிக்க பாதுகாப்பு பெட்டி
பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் புகார் மனு அளிக்க பாதுகாப்பு பெட்டியை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் அறிமுகம் செய்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பணியிடத்தில் பணி செய்யும் ஆண்களால் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டால், அது தொடர்பான புகாரை பாதுகாப்பு பெட்டியில் போடலாம். பாதுகாப்பு பெட்டிக்குள் புகார்கள் பெறப்பட்டால் உடனடியாக உள்ளக புகார் குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்து பெட்டி திறக்கப்படும். பாதுகாப்பு பெட்டி பூட்டின் ஒரு சாவி உள்ளக புகார் குழு தொழிலாளர் உறுப்பினரிடமும், மற்றொரு சாவி உள்ளக புகார்குழு சமூக அமைப்பு சார்ந்த உறுப்பினரிடமும் இருக்கும். புகார்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து உள்ளக புகார் குழு உறுப்பினர்களின் முன்னிலையில் பெட்டியில் இருந்து எடுக்கப்படும் மனு மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். உள்ளக புகார் குழு விசாரணையின் அடிப்படையில் மேற்கண்ட சட்ட நெறிமுறைகளுக்கு ஏற்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து பணியிடங்களிலும் பாதுகாப்பு பெட்டி அமைத்திட வேண்டும். பாதுகாப்பு பெட்டியில் போடப்பட்ட மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற நிலையிலோ, உள்ளக குழுவின் விசாரணை திருப்தி அளிக்காத பட்சத்திலோ எந்த தொழிலாளரும் மகளிர் உதவிஎண் 181 அல்லது மாவட்ட கலெக்டரை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ரகு, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜேன்கிறிஸ்டிபாய் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.