தபால் நிலையத்தில் பணம் திருடிய வெளிநாட்டு தம்பதி கைது


தபால் நிலையத்தில் பணம் திருடிய வெளிநாட்டு தம்பதி கைது
x

டி.கல்லுப்பட்டி அருகே தபால் நிலையத்தில் பணம் திருடிய வெளிநாட்டு தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே தபால் நிலையத்தில் பணம் திருடிய வெளிநாட்டு தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

பணம் திருட்டு

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள டி.குன்னத்தூர் தபால் நிலையத்தில் தபால் அதிகாரியாக சரண்யா இருக்கிறார். கடந்த மாதம் 22-ந்தேதி சரண்யா தபால் நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த தம்பதியினர், டாலரை இந்திய ரூபாயாக மாற்றி தர முடியுமா? என்று கேட்டுள்ளனர்.

அதற்கு சரண்யா. அந்த வசதி மதுரையில் தான் உள்ளது. அதனால் மதுரைக்கு செல்லுங்கள் என கூறியுள்ளார். வெளிநாட்டு பெண் மட்டும் அலுவலகத்தில் இருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து இருவரும் காரில் அங்கிருந்து சென்று விட்டனர்.

அதன்பின்னர் தபால் நிலைய அதிகாரி சரண்யா சந்தேகப்பட்டு அங்கிருந்த பணத்தை சரிபார்த்த போது அதில் ரூ.24 ஆயிரத்து 800 திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. தபால் நிலையத்துக்கு வந்த வெளிநாட்டு தம்பதி மீது சந்தேகம் உள்ளதாக சரண்யா டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

வெளிநாட்டு தம்பதி கைது

இதையடுத்து, போலீசார் இத்தகவலை தமிழகமெங்கும் உள்ள தபால் நிலையத்துக்கு அனுப்பினார்கள். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் வெளிநாட்டு தம்பதி சென்றபோது, அங்கிருந்தவர்கள் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தம்பதியை பிடித்து டி.கல்லுப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈரான் நாட்டை சேர்ந்த மகதி (வயது 38) மைனு (41) என்பது தெரிய வந்தது. இவர்கள் ஈரானிலிருந்து 3 மாத கால சுற்றுலா விசா எடுத்து டெல்லிக்கு வந்து உள்ளனர். அங்கிருந்து வாடகை கார் மூலம் வந்துள்ளனர். இந்த தம்பதியினர் அமெரிக்க டாலரை மாற்றுவது போல நடித்து கைவரிசை காண்பித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர்கள் எங்கெங்கு கைவரிசை காண்பித்து உள்ளனர் என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இத்தம்பதியினர் சுற்றுலா விசா காலம் முடிந்தும் இந்தியாவிலேயே தங்கி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.


Related Tags :
Next Story