நேரடி அன்னிய முதலீடு போதுமானதல்ல அதிக முதலீட்டை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
நேரடி அன்னிய முதலீடு போதுமானதல்ல அதிக முதலீட்டை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
2022-2023-ம் ஆண்டின் முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வந்த நேரடி அன்னிய முதலீடுகளின் மதிப்பு ரூ.5,836 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.5640 கோடியை விட ரூ.196 கோடி அதிகம் தான் என்றாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், திறனுக்கும் போதுமானதல்ல. 2019 அக்டோபர் முதல் கடந்த ஜூன் வரையிலான சுமார் மூன்றாண்டுகளில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு ரூ.52,676 கோடி (4 சதவீதம்) மட்டுமே அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இதிலும் மராட்டியம், கர்நாடகம், குஜராத், டெல்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக 5-வது இடத்தில் தான் உள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அன்னிய முதலீடுகள் அதிகம் தேவை. இதற்காக பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழகத்தை 5 தொழில் முதலீட்டு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு முதலீட்டு ஆணையரை நியமித்து அதிக முதலீட்டை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.