ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களை தூண்ட வெளிநாட்டு நிதி: கவர்னர் பரபரப்பு பேச்சு
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களை தூண்ட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டதாகவும், தீர்மானங்கள் நிலுவையில் இருக்கிறது என்றால், அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்றுதான் அர்த்தம் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை,
இந்திய சிவில் சர்வீசஸ் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன், கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி, சென்னை கிண்டி, ராஜ்பவனில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
கவர்னராக பதவியேற்று 1½ ஆண்டுகள் ஆகிவிட்டது. கேரளாவில் நான் பணியை தொடங்கி, மத்திய அரசு பணிகளுக்கு சென்றேன். நாட்டின் பிரச்சினைகள் உள்ள பகுதிகளில் எல்லாம் பணியாற்றி இருக்கிறேன்.
முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் நான் அமைதியான சூழலில் பணியாற்றுவதாக உணருகிறேன். தமிழ் மொழி வளம்மிக்க மொழி, அதன் தொன்மை வியப்பை தருபவையாக இருக்கிறது. நான் கவர்னராக தமிழ்நாட்டில் மகிழ்ச்சியுடன் பணிபுரிகிறேன். மக்கள் நான் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பை கொடுக்கின்றனர்.
ஒப்புதல் அளிக்க முடியாது
கவர்னரின் முதல் கடமையே இந்திய அரசியல் அமைப்பை பாதுகாப்பது தான். இந்திய அரசியல் அமைப்பின்படிதான், மத்திய-மாநில அரசுகள் செயல்பட முடியும். இந்தியாவில் மத்திய, மாநில மற்றும் பொது பட்டியல்கள் என இருக்கின்றன.
பொது பட்டியலில் இருப்பவைகளுக்கு மத்திய அரசு சட்டம் இயற்றவில்லையென்றால், அதற்கு மாநில அரசு சட்டம் இயற்றலாம். இதில் மத்திய அரசு சட்டம் இயற்றி இருந்தாலும், மாநில அரசு, மத்திய அரசின் சட்டத்துடன் பொருந்தும் வகையில் சட்டம் இயற்றலாம்.
சட்டசபையில் எந்த தீர்மானம் வேண்டுமென்றாலும் நிறைவேற்றலாம். ஆனால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாகாது. தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பதே அரசியலமைப்பின்படி கவர்னரின் கடமையாகும். தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிகளுக்குட்பட்டு இருக்கிறதா? என்பதை கவர்னர் பார்க்க வேண்டும். அப்படி மீறியிருந்தால், அதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது.
நிலுவையில் இருக்கிறது என்றால்...
இந்திய அரசியல் அமைப்பின்படி கவர்னர், சட்டசபை, சட்டமன்றக்குழு ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் மாநிலத்தின் சட்டமன்றம். அதனால்தான் கவர்னருக்கு தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் தீர்மானங்கள் மீது ஒப்புதல் அளிக்க 3 வாய்ப்புகள் உள்ளன.
தீர்மானம் விதிகளுக்குட்பட்டுள்ளது என்றால் ஒப்புதல் அளிக்கலாம், இது முதல் வாய்ப்பு. 2-வது வாய்ப்பு நிலுவையில் வைப்பது. தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருப்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள் என சுப்ரீம்கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு தெரிவிக்கிறது. நிலுவையில் இருக்கிறது என்றால், அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம்.
பொது பட்டியலில் உள்ளது என்றால் அதன் மீது முடிவெடுப்பதற்காக ஜனாதிபதியின் கருத்துக்காக அனுப்பி வைப்பது 3-வது வாய்ப்பு ஆகும்.
தடைகள்
இன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்த சில சக்திகள் இந்தியாவை நேரடியாக எதிர்கொள்வதற்கான சூழல் இல்லாததால், இங்கிருந்து கொண்டு சிலரை வைத்துதான் தாக்கவேண்டும், நம்மிடம் இருக்கும் ஒற்றுமையை குலைக்கவேண்டும், வளர்ச்சியை தடுக்கும் சூழலை உருவாக்க வேண்டும், பதற்றத்தை உருவாக்கவேண்டும், கலவரத்தை தூண்டவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.
நாட்டின் வளர்ச்சிக்குஎதிராக வெளிநாடுகளில் இருந்து திட்டங்கள் தீட்டப்பட்டு இதற்காக பல கோடி ரூபாய் நிதி நம் நாட்டுக்குள் வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை, காலநிலை மாற்றம் என பல்வேறு காரணிகளை கூறி நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்டெர்லைட் போராட்டம்
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிதிகள் போராட்டங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரையில் இது போன்ற நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் விளிஞ்சம் துறைமுகம் கொண்டு வரும்போதும், கூடங்குளம் அணுஉலை வரும்போதும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் மக்களை தூண்ட இதுபோன்ற நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அப்படித் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தார்கள். அந்த போராட்டம் முழுக்க முழுக்க வெளிநாட்டு நிதியுடன் நடத்தப்பட்ட சம்பவம். ஆனால் துரதிருஷ்டவசமாக போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகின. அது வருத்தத்துக்குரியதுதான்.
வெளிநாட்டு நிதி
இதன் மூலம் இந்தியாவின் 40 சதவீத தாமிரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வைத்துவிட்டார்கள். நம்முடைய அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தாமிரம் எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே அந்த தொழிற்சாலையை மூடினார்கள். இதன் பின்னணியில் இருந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டு நிதியை பெற்றிருக்கின்றனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதிகள் வந்துள்ளன. நாட்டில் பல பயங்கரவாத செயலுக்கு அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு சென்றவர்களில் 90 பேரை இந்த அமைப்பு அனுப்பி இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.