ரெயில்-பிளாட்பாரம் இடையே சிக்கி வெளிநாட்டு பெண் பலி
காட்பாடியில் ரெயிலில் ஏறும்போது ரெயில்-பிளாட்பாரம் இடையே சிக்கி வெளிநாட்டு பெண் பலியானார்.
காட்பாடியில் ரெயிலில் ஏறும்போது ரெயில்-பிளாட்பாரம் இடையே சிக்கி வெளிநாட்டு பெண் பலியானார்.
சிகிச்சைக்கு வந்த குடும்பம்
வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் அமிரூல் இஸ்லாம். இவருடைய மனைவி பர்வீன் (வயது 40) இவர்கள் தங்களுடைய 15 வயது மகளுடன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர். சிகிச்சை முடிந்து காட்பாடியில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து நாடு திரும்ப முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தனர். 2-வது பிளாட்பாரத்தில் சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது அமிரூல் இஸ்லாம் ரெயிலில் ஏறினார். அதிக பைகள் இருந்ததால் பர்வீன் ஒவ்வொரு பையையும் ரெயில் படிக்கட்டு அருகே வாசலில் ஏற்றி வைத்துவிட்டு கடைசியாக ஒரு பையை எடுத்துக் கொண்டு ரெயிலில் ஏறினார்.
ரெயிலில் இருந்து விழுந்தார்
அதற்குள் ரெயில் புறப்பட்டது. அப்போது பர்வீன் ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவர் பிளாட்பாரத்திற்கும் ரெயிலுக்கும் இடையில் சிக்கி கொண்டார்.
இதனைக் கண்ட அவருடைய கணவர் அலறி கூச்சலிட்டார். மற்ற பயணிகளும் சத்தம்போட்டனர். அதற்குள் ரெயில் மற்றும் பிளாட்பாரம் இடையே சிக்கிய பர்வீன் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அபாயசங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
பெண் சாவு
காட்பாடி ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் பர்வீனை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பர்வீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிகிச்சைக்கு வந்த இடத்தில் மனைவி பலியானதை கண்டு அமிரூல் இஸ்லாம் அழுது துடித்தார். இந்த சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓடும் ரெயிலில் ஏற வேண்டாம்
இது தொடர்பாக காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் ஏறும்போது பயணிகள் கவனமுடன் ஏற வேண்டும். ஓடும் ரெயில்களில் எந்த காரணத்தைக் கொண்டும் ஏற முயற்சி செய்ய வேண்டாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.