தூத்துக்குடியில் நாய் கழுத்தில் சிக்கிய பிளாஸ்டிக்கை அகற்றிய வெளிநாட்டு பெண்
தூத்துக்குடியில் நாயின் கழுத்தில் சிக்கிய உடைந்த பிளாஸ்டிக் குடத்தை வெளிநாட்டு பெண் ஒருவர் லாவகமாக அப்புறப்படுத்திய காட்சி பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நாயின் கழுத்தில் சிக்கிய உடைந்த பிளாஸ்டிக் குடத்தை வெளிநாட்டு பெண் ஒருவர் லாவகமாக அப்புறப்படுத்திய காட்சி பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வெளிநாட்டு பெண்
தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் மில்லர்புரம் பகுதியில் ரோட்டோரமாக ஒரு நாய் நின்று கொண்டு இருந்தது. அந்த நாயின் கழுத்தில் உடைந்த பிளாஸ்டிக் குடத்தின் வாய் பகுதி மாலை போன்ற மாட்டிக் கொண்டது. இதனால் அந்த நாய் அவதிப்பட்டு கொண்டு இருந்தது. அந்த சாலையை கடந்து சென்ற பலரும் இதனை வேடிக்கை பார்த்தபடியே சென்றனர். அதே நேரத்தில் அந்த ரோட்டில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த அன்கா என்ற இளம்பெண் வந்தார். அவர் நாய் அவதிப்படுவதை பார்த்து மனமிறங்கினார்.
நாய் மீட்பு
உடனடியாக அருகில் உள்ள கடையில் பிஸ்கட் வாங்கினார். அந்த பஸ்கட்டை ஒவ்வொன்றாக நாய்க்கு கொடுத்தார். இதனால் அந்த நாய் அன்காவிடம் பழகத் தொடங்கியது. இதனை பயன்படுத்தி ஒரு சிறிய கயிறால் நாயை பிடித்துக் கொண்டு, அதன் கழுத்தில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் குடத்தை அகற்ற முயன்றார். ஆனால் நாய் ஆக்ரோசமாகி அன்காவை பார்த்து உறுமியது. ஆனாலும் அவர் முயற்சியை கைவிடவில்லை. மீண்டும் அந்த நாய்க்கு பிஸ்கட் கொடுத்தார். அதன்பிறகு சாந்தமான நாயின் கழுத்தில் கிடந்த பிளாஸ்டிக்கை லாவகமாக அன்கா அகற்றினார். இதனை பார்த்த பொதுமக்கள் அன்காவின் மனிதாபிமானத்தை பாராட்டியபடி சென்றனர்.