கடையநல்லூர் அருகே வனத்துறை அதிகாரி ஆய்வு


கடையநல்லூர் அருகே வனத்துறை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே யானைகள் அட்டகாசத்தை தொடர்ந்து வனத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள வடகரை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பல ஏக்கர் நிலத்தில் தென்னை, வாழை, கரும்பு, பலா, எலுமிச்சை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக 15-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் அங்கு வந்து தென்னை, வாழை உள்ளிட்டவற்றை பிடுங்கி எறிந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட தென்னைகளை பிடுங்கி, குருத்தோலைகளை தின்று உள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் அளித்த புகாரை தொடர்ந்து, வடகரை பகுதியில் உதவி வன பாதுகாவலர் ஷாநவாஸ் ஆய்வு செய்தார். யானைகளை விரட்டும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், 'சொக்கம்பட்டி பீட்டில் இருந்து விரட்டப்படும் யானைகள் மேக்கரை பீட் சென்று வெள்ளக்கல் தேரி பீட் வடகரை பகுதி விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவிக்கின்றன. அங்கே இருந்து விரட்டும்போது சொக்கம்பட்டி பீட்டுக்கும், இங்கே இருந்து விரட்டும்போது வடகரை பகுதிக்கும் அவை செல்கின்றன. யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு பகலாக ஈடுபடுகின்றனர். நேற்று முன்தினம் வடகரை காட்டுப்பகுதிக்கு சென்று அங்கே நின்ற யானை கூட்டத்தை பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். இதற்கு வனத்துறையினருக்கு விவசாயிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என்றார்.


Next Story