லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றிய வனத்துறை ஊழியர்கள்
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களை வனத்துறை ஊழியர்கள் அகற்றினர்.
லோயர்கேம்பில் இருந்து கேரள மாநிலம் குமுளி வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதை உள்ளது. இயற்கைவளம் நிறைந்த இந்த மலைப்பாதையில் மான், குரங்கு, காட்டுப்பன்றி, காட்டெருமைகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக சாலையோரங்களில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இந்த மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி இயற்கை எழில்கொஞ்சும் வனப்பகுதியை ரசித்து செல்கின்றனர். அப்போது அவர்கள் கொண்டுவரும் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் பைகளையும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையும் வனப்பகுதியில் வீசிவிட்டுச்செல்கின்றனர். இதனால் குமுளி செல்லும் மலைப்பாதையில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. எனவே குப்பைகளை அகற்றவும், பிளாஸ்டிக் பொருட்களை சாலையோரம் வீசுவதை தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கூடலூர் வனச்சரகர் முரளிதரன் தலைமையில் வனவர்கள் பூபதி, திருமுருகன், குருசாமி மற்றும் வனத்துறை ஊழியர்கள் பளியங்குடி, பென்னிகுவிக் மணிமண்டபம் மற்றும் தமிழக-கேரள எல்லையான குமுளி வனப்பகுதியில் சாலையோரங்களில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சாலையோரம் குப்பைகளை வீசக்கூடாது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.