கொடைக்கானல் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ


கொடைக்கானல் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ
x

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல்

காட்டுத்தீ

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தனியார் தோட்டப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை வனத்துறையினர், தீயணைப்புதுறையினர் மற்றும் பொதுமக்கள் அணைத்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கொடைக்கானல் வனக்கோட்டம் பாம்பார் வனப்பகுதி, தனியார் தோட்டப்பகுதிகளிலும் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென அந்த பகுதியில் பரவியது. இதில் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள் எரிந்து நாசமாகின.

20 வனஊழியர்கள்

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. காட்டுத்தீ பரவியதை தொடர்ந்து அங்கு இருந்த வனவிலங்குகள் இடம் பெயர்ந்து அருகே உள்ள வெள்ளகவி கிராமத்தை நோக்கி செல்ல தொடங்கின.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட வனஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாம்பார் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை விரைவில் அணைத்து விடுவோம் என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே நேற்று பகல் ஒரு மணி அளவில் நாயுடுபுரத்தை அடுத்த வில்பட்டி செல்லும் மலைப்பாதையில் தனியார் நிலத்தில் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து கொடைக்கானல் தீயணைப்புத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story