மேகமலை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ; அரியவகை மரம், செடிகள் எரிந்து நாசம்


மேகமலை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ; அரியவகை மரம், செடிகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 8 Aug 2023 2:30 AM IST (Updated: 8 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

மேகமலை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் அரியவகை மரம், செடிகள் எரிந்து நாசமாகின.

தேனி

மேகமலை வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் அரியவகை மரம், செடிகள் எரிந்து நாசமாகின.

மேகமலையில் காட்டுத்தீ

தேனி மாவட்டம் மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் மேகமலை வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இதேபோல் அருகில் உள்ள வெள்ளிமலை வனப்பகுதியிலும் மரம், செடிகள் காய்ந்து கிடக்கின்றன. இதனால் அவ்வப்போது மலைப்பகுதியில் மரம், செடிகளில் உராய்வு ஏற்பட்டு காட்டுத்தீ ஏற்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில் கடமலைக்குண்டு அருகே மேகமலை வனப்பகுதியான, மஞ்சனூத்து வனத்துறை சோதனை சாவடி அருகில் உள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ மளமளவென எரிந்து மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவியது. சில மணி நேரத்தில் கோம்பைத்தொழு வரை காட்டுத்தீ பரவியது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த அரியவகை மரம், செடிகள் தீயில் எரிந்து நாசமானது.

இடம்பெயர்ந்த வனவிலங்குகள்

இந்த காட்டுத்தீயால் அப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேகமலை வனத்துறையினர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பல இடங்களில் பரவியதால் வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் சிரமப்பட்டனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தீத்தடுப்பு கோடுகள் அமைத்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே காட்டுத்தீ இயற்கையாக ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்களால் செயற்கையாக காட்டுத்தீ ஏற்படுத்தப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story