வனப்பகுதியில் காட்டுத்தீ
நேற்று ஆயக்குடி அருகே சட்டப்பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி புகைமூட்டம் வந்தது.
பழனி பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஆயக்குடி அருகே சட்டப்பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி புகைமூட்டம் வந்தது. இதைக்கண்ட மலையடிவார தோட்ட விவசாயிகள், ஒட்டன்சத்திரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனச்சரகர் ராஜா உத்தரவின்பேரில் வனக்காப்பாளர்கள் ரமேஷ், மோகன்ராஜ் மற்றும் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. எனினும் அந்த பகுதியில் இருந்த செடி, கொடிகள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்துள்ள நிலையில் தீப்பிடித்து உள்ளது. நல்லவேளையாக தீப்பிடித்த பகுதியில் பாறைகள் இருந்ததால் விரைவாக அணைக்கப்பட்டு தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இல்லையெனில் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும். தீ எவ்வாறு பிடித்தது என விசாரித்து வருகிறோம் என்றனர்.