வனப்பகுதியில் தொடர்ந்து பற்றி எரியும் தீ
குற்றியாறு அருகே வனப்பகுதியில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயால் பழங்குடியின மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குலசேகரம்,
குற்றியாறு அருகே வனப்பகுதியில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயால் பழங்குடியின மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காட்டுத்தீ
குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள நிலப்பரப்பில் சுமார் 33 சதவீதம் காடுகள் உள்ளன. ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் காடுகளில் அவ்வப்போது திடீரென தீப்பற்றி எரிவதால் வனவளம் அழிவதோடு வன விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப்படுகிறது.
அதுதவிர வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள், ரப்பர் கழக தொழிலாளர்களும் காட்டுத்தீயால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதே சமயத்தில் காடுகளில் ஏற்படும் தீயை கண்காணிக்கும் வகையில் காடுகளில் தீத்தடுப்பு காவலர்கள் போதிய அளவில் நியமிக்கப்படவில்லையெனவும், தீத்தடுப்பு கோடுகள் வெட்டப்படவில்லையெனவும் பழங்குடியின மக்கள் மற்றும் ரப்பர் கழக தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பற்றி எரிகிறது
இதற்கிடையே தற்போது மாவட்டம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மலைப்பகுதி, வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் தீப்பற்றி எரிகிறது.
குறிப்பாக கோதையாறு அருகே குற்றியாறு ராக்ஏரியா வனப்பகுதி மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் செடி, கொடிகளில் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிகிறது.
காட்டு பகுதிகளில் உடனே சென்று தீயை அணைக்கும் வகையிலான தொழில்நுட்பம் இல்லாத நிலையில் தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது.
இதுகுறித்து தோட்ட தொழிலாளர் சங்க குமரி மாவட்ட தலைவர் பி.நடராஜன் கூறுகையில், காட்டுக்குள் ஏற்பட்டுள்ள தீயால் ரப்பர் மரங்கள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் கருகி வருவதுடன், வன விலங்குகளும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. எனவே வனத்துறையினர் காட்டுக்குள் தீ ஏற்படாத வகையில் போதிய தீத் தடுப்பு காவலர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். மேலும் தனியார் வனப்பகுதி எல்கைகளில் தீத்தடுப்பு கோடுகள் வெட்ட வேண்டும் என்றார்.