காட்டெருமை தாக்கி வனக்காப்பாளர் படுகாயம்


காட்டெருமை தாக்கி வனக்காப்பாளர் படுகாயம்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மசினகுடி வனப்பகுதியில் ரோந்து சென்ற போது, காட்டெருமை தாக்கி வனக்காப்பாளர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

மசினகுடி,

மசினகுடி வனப்பகுதியில் ரோந்து சென்ற போது, காட்டெருமை தாக்கி வனக்காப்பாளர் படுகாயம் அடைந்தார்.

காட்டெருமை விரட்டியது

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்டை கும்பல்கள் நடமாட்டம் உள்ளிட்ட வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் தினமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மசினகுடி வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மதியம் 12 மணிக்கு உப்பள்ளா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் புதரில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று திடீரென வனத்துறையினரை நோக்கி ஓடி வந்து விரட்டியது. இதைக் கண்ட வன ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால், வனக்காப்பாளர் சசிதரன் (வயது 53) என்பவர் காட்டெருமையிடம் சிக்கினார்.

வனக்காப்பாளர் படுகாயம்

மேலும் காட்டெருமை அவரை முட்டி தள்ளியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனிடையே வன ஊழியர்கள் கூச்சலிட்டு காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்து காட்டெருமை சென்றது. தொடர்ந்து படுகாயமடைந்த சசிதரனை மீட்டு மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. வனவிலங்குகள் தாக்குதலுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி வன ஊழியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story