காயம் அடையும் கடல் பசுக்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மீனவர்களுக்கு பயிற்சி- மாவட்ட வன அலுவலர்
அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காயம் அடையும் கடல் பசுக்களுக்கு சிகிச்சை அளிக்க மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி கூறினார்.
அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காயம் அடையும் கடல் பசுக்களுக்கு சிகிச்சை அளிக்க மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி கூறினார்.
அரிய வகை உயிரினம்
பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுக்கள் அதிக அளவில் வசிக்கின்றன. இந்த அரிய வகை உயிரினங்கள் மீனவர்களின் வலையில் அடிக்கடி சிக்கி கொள்கின்றன. இவற்றை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மந்திரிப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
வலையில் சிக்கிய கடல் பசு
அப்போது மீனவர்கள் வலையில் அவுரியா எனப்படும் அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடல் பசு சிக்கியது. இதையடுத்து, தங்கள் வலையை அறுத்து அந்த கடல் பசுவை மீண்டும் உயிருடன் கடலில் மீனவர்கள் விட்டனர்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி மனோரா கடற்கரையில் தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தலைமையில் நடந்தது. மீனவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர் பேசியதாவது:-
அபூர்வ வகை உயிரினங்களான கடல் பசுவை அனைவரும் பாதுகாக்க வேண்டும். கடல்வாழ் உயிரினங்களின் வாழுமிடமான கடற்பாசிகளை உருவாக்குவதில் அவுரியா முக்கிய இடம் வகிக்கிறது. கடல் பசு அரிய வகை கடல்வாழ் உயிரினங்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவற்றை பிடிக்க கூடாது. கடல் பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதலுதவி சிகிச்சை
மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கினால், கடல்பசுவின் காயத்திற்கு முதலுதவி சிகிச்சை அளித்து கடலுக்குள் மீண்டும் விடும் வகையில் மீன்வளத்துறை, வனத்துறை சார்பில் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு வனத்துறை சார்பில் மீனவர்கள் 11 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ், சேதமடைந்த மீன் வலைக்காக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. இதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் மொத்தம் ரூ.1 லட்சம் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், வனச்சரகர்கள் குமார், ரஞ்சித், வனவர் சிங்காரவேலு, கடலோர காவல்துறை உதவி ஆய்வாளர் நவநீதன், மீன்வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஜலீலா பேகம், முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.