வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை


வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை பகுதியில் புலி நடமாட்டம் கிடையாது என்றும், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் எச்சரித்தார்.

சிவகங்கை

சிவகங்கை பகுதியில் புலி நடமாட்டம் கிடையாது என்றும், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் எச்சரித்தார்.

வீடியோ வைரல்

சிவகங்கை அருகே உள்ள மாடு மறித்தான் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது ஆட்டுக்குட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது. அதில் ஒரு ஆட்டின் கழுத்தை மர்ம விலங்கு துண்டித்து இழுத்து சென்றது. இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் புலி நடமாட்டம் இருக்கலாம் என்று இந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று சோதனையிட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்தனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலையில் சமூக வலைதளங்களில் புலி ஒன்று ரோட்டை கடந்து செல்வது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த புலி சிவகங்கை பகுதிகளில் நடமாடுவதாகவும் கருத்து தெரிவித்து பரப்பினர். இதனால் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டது.

புலி நடமாட்டம் இல்லை

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபா வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:- மாடு மறித்தான் கிராமத்தில் மர்ம விலங்கு தாக்கி ஆடு இறந்ததாக கிடைத்த தகவலின் பேரில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஆய்வு செய்தோம். அங்கு காட்டு முயல் நடமாட்டத்தை தவிர வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் எதுவும் இல்லை. ஆடு இறந்தது நாய் கடித்துதான் என்பதையும் வனத்துறையினர் உறுதி செய்தனர்.

சிவகங்கை பகுதிகளில் புலி சுற்றி திரிவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவுகிறது. இது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநில பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவாகும். எனவே, இங்கு புலி நடமாட்டம் இல்லை.

வதந்திகளை நம்ப வேண்டாம்

சிவகங்கை மாவட்டத்தில் 20,000 எக்டேர் பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காப்புக்காடுகள் என்று அழைக்கப்படும் இங்கு மான்கள், முயல், மயில் ஆகியவை உள்ளன. இங்கு புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் கிடையாது.

எனவே மக்களை அச்சுறுத்தும் வகையில் புலி நடமாட்டம் உள்ளதாக வதந்திகளை பரப்புவோர் மீது வன சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களும் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story