கடன் வாங்கி தருவதாக முகநூலில் விளம்பரம் கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி கோவையை சேர்ந்த 2 பேர் கைது


கடன் வாங்கி தருவதாக முகநூலில் விளம்பரம் கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

கடன் வாங்கி தருவதாக முகநூலில் விளம்பரம் கொடுத்து ரூ.1 லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

முகநூலில் விளம்பரம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மகாதேவபட்டினத்தை சேர்ந்தவர் தில்லைராஜ்(வயது 40). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக ஏற்பாடு செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் முகநூலில் கார் வாங்க கடன் பெற்றுத்தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்த தில்லைராஜ் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அதில் பேசியவர்கள் வீடு கட்டுவதற்கும், நாங்கள் கடன் தொகை பெற்று தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை தில்லைராஜிடம் கூறி உள்ளனர். இதனையடுத்து கடன் தொகையை பெறுவதற்கு தேவையான செயலாக்க கட்டணத்தை தங்களுடைய வங்கி கணக்குகளில் முன்கூட்டியே செலுத்துமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.

அழைப்பு துண்டிப்பு-ஏமாற்றம்

அதை நம்பிய தில்லைராஜ் 3 தவணைகளாக அவர்களுடைய வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 850 செலுத்தி உள்ளார். அதனை தொடர்ந்து தனக்கு வீடு கட்டுவதற்கு கடன் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் அந்த செல்போன் எண்ணிற்கு தில்லைராஜ் தொடர்பு கொண்டார். அப்போது அவர்கள் எந்தவித பதிலும் கூறாமல் செல்போன் அழைப்பை துண்டித்துள்ளனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தில்லைராஜ், திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் கோவை மாவட்டம் நல்லாம்பாளையத்தை சேர்ந்த சுசாந்திரகுமார்(36), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(21) ஆகியோர் தில்லைராஜை ஏமாற்றி பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 850-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் மோசடி செய்ய பயன்படுத்திய 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story