மருத்துவத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
மருத்துவத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மருத்துவத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஆசை வார்த்தை
ஈரோடு சம்பத்நகர் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் (வயது 59) என்பவர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
எனது உறவினர் மகன் மாணிக்கராஜ் என்பவர் டிப்ளமோ படித்துவிட்டு வேலை வாய்ப்பின்றி இருந்து வந்தார். இந்த நிலையில், எனக்கு தெரிந்த சித்த வைத்தியர் ஒருவர் மூலமாக கரும்பாறை புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். அப்போது அவர், தனக்கு மருத்துவத்துறையில் செல்வாக்கு உள்ளது என்றும், எனது உறவினர் மகன் மாணிக்க ராஜுக்கு மருத்துவ பணியாளர் பணி வாங்கித்தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
மிரட்டல்
அதற்கு முதல் கட்டமாக ரூ.4 லட்சம் வேண்டும் என கேட்டார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டபின் மேலும் 2-வது கட்டமாக ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வேலை குறித்து கேட்டபோது கால தாமதம் செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 5-ந்தேதி அவரை நேரில் சந்தித்து கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, பணத்தை கொடுக்க முடியாது என கூறி மிரட்டல் விடுத்தார். எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
பணி மாறுதல்
இதேபோல் கரும்பாறை புதூர் பகுதியை சேர்ந்தவர் மீது புகார் தெரிவித்து ஈரோடு சம்பத் நகரை சேர்ந்த பெரியசாமி (90) என்பவரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
எனது அண்ணன் மகள் செவிலியராக பணியாற்றி வருகிறார். அவர் ஈரோட்டிலேயே பணியாற்ற பணி மாறுதல் வாங்கித்தருவதாக கரும்பாறை புதூர் பகுதியை சேர்ந்தவர் கூறினார். அதை நம்பி நான் அவர் கேட்டபடி ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கொடுத்தேன். ஆனால், பணி மாறுதல் வாங்கித்தரவில்லை. அதுகுறித்து, அவரிடம் கடந்த வாரம் நேரில் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.