ஜவுளி நிறுவனம் அமைத்து தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.49¼ லட்சம் மோசடி; கணவன்-மனைவி கைது - மகள், மருமகனுக்கு வலைவீச்சு
ஜவுளி நிறுவனம் அமைத்து தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.49¼ லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர். மகள், மருமகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பவானி
ஜவுளி நிறுவனம் அமைத்து தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.49¼ லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர். மகள், மருமகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
வக்கீல்
திருச்சி மண்ணச்சநல்லூர் சிறுகண்ணூர் பகுதியை சேர்ந்தவர் அரசபிரபாகரன் (வயது 44). இவர் திருச்சி லால்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். கடந்த மே மாதம் 5-ந் தேதி பிரபல ஜவுளி நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் விருப்பம் உள்ளவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஒரு முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்றும் கேள்விபட்டார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட முகவரியில் உள்ள அலுவலகத்துக்கு அரச பிரபாகரன் சென்றார். அங்கு மேலாளராக இருந்த தாமரை என்பவர் இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர் மணிராஜ் என்பவரை நேரில் சந்திக்குமாறு கூறியுள்ளார்.
ரூ.15 லட்சம் முன்பணம்
இதைத்தொடர்ந்து திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் வசித்து வந்த மணிராஜ் (56), அவருடைய மனைவி சாந்தி (52), மகள் பவித்ரா, மருமகன் சசிக்குமார் ஆகியோரை பிரபாகரன் சந்தித்து பேசினார். அப்போது, 'நான் திருச்சியில் தங்களுடைய ஜவுளி நிறுவனத்தின் கிளை அமைக்கலாம் என்று வந்துள்ளேன்' என்று கூறியுள்ளார். அதற்கு மணிராஜ், 'எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கும் வேட்டி, சட்டை, ஜட்டி ஆகியவை தரமாக இருப்பதாகவும். நீங்கள் திருச்சியில் கிளை தொடங்கினால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். இதற்காக ரூ.15 லட்சம் முன்பணம் நீங்கள் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கடையின் மாதிரி வடிவத்தை நாங்களே அமைத்து கொடுப்போம். அதற்கு தனியாக ரூ.1 லட்சம் தரவேண்டும். எங்களுடைய ஜவுளி நிறுவனம் தமிழகம் முழுவதும் ஒரே வடிவத்தில் இருக்கவேண்டும்' என்று கூறியுள்ளார்.
2 தவணையாக...
அதைக்கேட்ட பிரபாகரன் தமிழகத்தில் 4 இடங்களில் தன்னுடைய உறவினர் 3 பேரை சேர்த்துக்கொண்டு 4 இடங்களில் கிளை அமைக்கிறேன் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக 4 ேபருக்கும் சேர்த்து தலா ரூ.15 லட்சம் மற்றும் கூடுதலாக ரூ.1 லட்சத்தை சேர்ந்து ரூ.61 லட்சத்தை 2 தவணையாக கடந்த மாதம் காசோலையாக வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் வங்கியில் அந்த காசோலையை செலுத்தி பணத்தை பெற்றுக்கொண்டனர்.
அதன் பின்னர் ஜவுளி நிறுவனம் அமைத்து கொடுப்பதற்கான எந்த பணியையும் மணிராஜ் குடும்பத்தினர் செய்து கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அரசபிரபாகரன், மணிராஜிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டு வற்புறுத்தி உள்ளார். இதையடுத்து மணிராஜ் அரசபிரபாகரனுக்கு ரூ.11 லட்சத்து 75 ஆயிரத்ைத வழங்கியதாக தெரிகிறது.
கணவன்-மனைவி கைது
இந்தநிலையில் மீதமுள்ள தொகையை விரைவில் தந்துவிடுவதாக அரச பிரபாகரனிடம் கூறிய மணிராஜ் குடும்பத்தினர் திடீரென தலைமறைவாகி விட்டனர். அவர்களை பல்வேறு இடங்களில் அரசபிரபாகரன் தேடினார். இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையம் தெற்கு வீதியில் மணிராஜ் தங்கியிருப்பது தெரியவந்தது. இதுபற்றி உடனே பிரபாகரன் சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மணிராஜ், மனைவி சாந்தி, மகள் பவித்ரா, மருமகன் சசிக்குமார் ஆகியோர் ஜவுளி நிறுவனம் அமைத்து தருவதாக தன்னிடம் ரூ.49 லட்சத்து 25 ஆயிரத்தை பெற்று மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணிராஜ், சாந்தி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பவித்ரா, சசிக்குமார் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.