மயிலாடுதுறையில் பெண்ணை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பண பரிமாற்றம்; மகன், மருமகள் மீது வழக்கு
மயிலாடுதுறையில் பெண்ணை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக அவருடைய மகன், மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறையில் பெண்ணை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக அவருடைய மகன், மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண பரிமாற்றம்
மயிலாடுதுறை அருகே உள்ள பாண்டூர் வயல்வெளி ராமாபுரம் பகுதியை சேர்ந்த கோபு மனைவி பவுனாச்சி (வயது59). இவர் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மகன் செல்வக்குமார், இவருடைய மனைவி பானுப்பிரியா ஆகியோருடன் மயிலாடுதுறையில் உள்ள வங்கிக்கு சென்றார்.
அப்போது செல்வக்குமார், தனது தாய் பவுனாச்சி கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரத்தை தனது மனைவி பானுப்பிரியாவின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்து உள்ளார். இந்த விவரம் பவுனாச்சிக்கு அப்போது தெரியவில்லை.
மகன்-மருமகள் மீது வழக்கு
இந்த நிலையில் நேற்று முன்தினம் வங்கியில் பணம் எடுக்க பவுனாச்சி சென்றபோது அவருடைய கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம், பானுப்பிரியாவின் கணக்கிற்கு மாற்றப்பட்டது, தெரியவந்தது. இதனையடுத்து பவுனாச்சி அந்த பணத்தை தருமாறு தன் மகன், மருமகளிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பவுனாச்சி நேற்று முன்தினம் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இதுதொடர்பாக செல்வகுமார், பானுப்பிரியா ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.