உயிருடன் உள்ள பெண் இறந்ததாக போலி ஆவணம் தயாரித்து வீட்டுமனை அபகரிப்பு


Forgery of a living woman's death by making a fake document and seizing the house

வாணியம்பாடி,

ஆம்பூரை சேர்ந்த பெண் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக கூறி அவரது கணவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து ஆந்திராவில் வீட்டுமனைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆம்பூர் நகராட்சியில் விசாரணை நடத்த குப்பம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வீட்டுமனைகள்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் காஞ்சனா. இவரது கணவர் ரவிவர்மா 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சொந்தமாக, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பத்தை அடுத்த கூடுபள்ளி மண்டலம் நலகம்பள்ளியில் 2 வீட்டுமனைகள் உள்ளன. இவற்றின் தற்போதைய மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

கணவர் இறந்த பிறகு காஞ்சனா பிறந்த ஊரான ஆம்பூருக்கு வந்து வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தன்னுடைய வீட்டு மனைகளை பார்ப்பதற்காக நலகம்பள்ளி கிராமத்திற்கு காஞ்சனா சென்று இருந்தார்.

அப்போது அவருடைய 2 வீட்டு மனைகளிலும் வீடுகள் கட்டப்பட்டு வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அந்த இடம் வேறு ஒருவருக்கு பத்திர பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து காஞ்சனா விசாரித்த போது, ஆம்பூரை சேர்ந்த கவுஸ் பாஷா என்பவர் காஞ்சனா இறந்து விட்டதாக ஆம்பூரில் சான்றிதழ் வாங்கி, 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட காஞ்சனாவின் கணவர் ரவிவர்மா என்று வேறொரு நபரை அழைத்து சென்று பத்திர பதிவு செய்தது தெரிய வந்தது. அந்த இடத்தை கவுஸ்பாஷா விற்று விட்டு தலைமறைவாகி விட்டார்.

புகார்

கணவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதற்கு ஆதாரமான இறப்பு சான்றிதழை எடுத்து சென்று காஞ்சனா அளித்த புகாரின் பேரில் குப்பம் சார்பதிவாளர் வெங்கட சுப்பையா குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலியான இறப்புச் சான்றிதழ் வழங்கியது பற்றி குப்பம் போலீசார் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

உயிருடன் இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டுமனைகளை இறந்ததாக கூறி பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிருடன் உள்ள காஞ்சனாவுக்கு அவர் பிறந்த ஊரான ஆம்பூர் நகராட்சியிலேேய அவர் இறந்து விட்டதாக கூறி அதுவும் ஆம்பூரை சேர்ந்தவரே வேறு ஒருவரை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story