காசோலையில் போலி கையெழுத்திட்டு ரூ.12 லட்சம் மோசடி; வாலிபர் கைது


காசோலையில் போலி கையெழுத்திட்டு  ரூ.12 லட்சம் மோசடி; வாலிபர் கைது
x

ஜமுனாமரத்தூரில் காசோலையில் போலியாக கையெழுத்திட்டு ரூ.12 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூரில் காசோலையில் போலியாக கையெழுத்திட்டு ரூ.12 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தொழில் முனைவோர் கூட்டமைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா கோமுட்டி ஏரி பகுதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி சாந்தி (வயது 40). இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஜவ்வாதுமலை பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவியாக உள்ளார்.

இந்த கூட்டமைப்பில் ஜமுனாமரத்தூரை சுற்றியுள்ள மலை கிராமங்களை சேர்ந்த 12 மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஜமுனாமரத்தூரில் உள்ள ஜம்படி கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் (32) என்பவர் கள அலுவலராக இருந்தார்.

இந்த கூட்டமைப்பிற்கான சேமிப்பு கணக்கு ஜமுனாமரத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ளது. வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க குழுவின் தலைவியான சாந்தி, பொருளாளரான தீபா, முதன்மை நிர்வாகியான அருள்பத்திநாதன் ஆகியோர் குழு கூட்டமைப்பால் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

ரூ.12 லட்சம் மோசடி

இந்த கூட்டமைப்பில் 12 மகளிர் குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் விவசாய பொருட்களை வாங்குவது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்குரிய பணத்திற்கு காசோலையில் அவர்கள் 3 பேரும் கையெழுத்திட்டு அதை கள அலுவலர் பிரவீன்குமாரிடம் கொடுத்து அனுப்புவர்.

இந்த நிலையில் பிரவீன்குமார் கூட்டமைப்பின் வங்கி காசோலையில் தலைவி உள்ளிட்ட நிர்வாகிகளின் கையெழுத்தை போட்டு அதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து ரூ.12 லட்சம் எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவி சாந்தி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போலியாக காசோலையில் கையெழுத்திட்டு ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பிரவீன்குமாரை கைது செய்தனர்.


Next Story