மாநில அணை பாதுகாப்புக் குழு உருவாக்கம் - தமிழக அரசு உத்தரவு


மாநில அணை பாதுகாப்புக் குழு உருவாக்கம் - தமிழக அரசு உத்தரவு
x

மத்திய அரசு சட்டத்தின்படி மாநில அணை பாதுகாப்புக் குழு உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனாவின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசின் அணை பாதுகாப்புச் சட்டம் 2021-ன்படி, அணை பாதுகாப்புக்கான மாநிலக் குழுவை உருவாக்கி அரசு உத்தரவிடுகிறது.

அந்தக் குழுவின் அலுவல்சாரா தலைவராக நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் (பொது) இருப்பார். மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பு பொறியாளர் அதன் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார். அவர்களுடன் பல்வேறு மண்டலங்களின் தலைமைப் பொறியாளர் உள்பட 13 பேர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள். இதில் கேரளா, புதுச்சேரி அரசுப் பொறியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதுபோல, தமிழக நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் உள்ளிட்ட 11 பொறியாளர்களைக் கொண்ட மாநில அணை பாதுகாப்பு அமைப்பையும் உருவாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story