ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முயன்ற விவசாயிகள்
நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரை வழங்கக்கோரி வெள்ளகோவில் கிளை வாய்க்கால் பாசன விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒப்படைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரை வழங்கக்கோரி வெள்ளகோவில் கிளை வாய்க்கால் பாசன விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒப்படைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளகோவில் கிளை கால்வாய்
பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம்-வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கத்தினருடன் திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பாசன திட்டத்தின் மூலமாக 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
இதில் காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் மட்டும் 48 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற வேண்டும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து போராடியும் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் கிடைக்காமல் திருடப்படுகிறது.
அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார்கள். 40 சதவீதம் தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. அதில் 20 சதவீத தண்ணீரையாவது தங்களுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில் சரியான பதில் தெரிவிக்கவில்லை.
உள்ளிருப்பு போராட்டம்
இதைத்தொடர்ந்து விவசாயிகள் ஏற்கனவே தெரிவித்தப்படி, தங்களின் வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒப்படைக்க வந்தனர். ஆனால் அவர் வாங்கவில்லை. இதனால் மேஜை மீது அடையாள அட்டைகளை விவசாயிகள் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளியே சென்றனர்.
இதனால் விவசாயிகள் கூட்ட அரங்குக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரவு வரை விவசாயிகளின் உள்ளிருப்பு போராட்டம் நீடித்தது.