அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல்


அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல்
x

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் எம்.சி.சம்பத். முன்னாள் தொழில்துறை அமைச்சரான இவர், அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர், எம்.சி.சம்பத் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த போது அவருக்கு உதவியாளராக இருந்து வந்தார். அப்போது எம்.சி.சம்பத்துக்கும், குமாருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்துள்ளதாக தொிகிறது.

இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு குமார், எம்.சி.சம்பத்திடம் உதவியாளர் வேலைக்கு செல்லவில்லை. அதன் பிறகு இருவருக்கும் இடையே பணம்-கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு குமாரிடம் வேலைக்கு வருமாறு எம்.சி.சம்பத் கூறியுள்ளார். அதற்கு அவர், தனக்கு வேலைக்கு வர விருப்பம் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சகோதரர் எம்.சி.தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜேந்திரன், பழனி உள்ளிட்டோர் நேற்று காலை 7 மணி அளவில் குமாரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் குமார் இல்லை. அவரது மாமனார் ராமச்சந்திரன் (வயது 72), மாமியார் ஜோதி (68) ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர்.

பின்னர் அவர்கள், ராமச்சந்திரன், ஜோதி ஆகியோரை வீட்டில் இருந்து அதே பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை குறித்து பேசியுள்ளனர். அப்போது குமார் உதவியாளராக இருந்த போது கொடுக்க வேண்டிய பணம் குறித்தும் கேட்டனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அவர்கள் ராமச்சந்திரனையும், ஜோதியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தகராறை விலக்கி விட்டனர். தொடர்ந்து ராமச்சந்திரன், ஜோதி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ராமச்சந்திரன், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் எம்.சி.தங்கமணி, ராஜேந்திரன், பழனி, ராதா உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ராஜேந்திரன், ராதா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக எம்.சி.சம்பத் இன்று கடலூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் கூறி உள்ளார். குடும்ப பிரச்சனையில் அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story