போலி முகநூல் மூலம் முன்னாள் டி.ஜி.பி. ரவி பெயரில் மோசடி முயற்சி -போலீசார் விசாரணை


போலி முகநூல் மூலம் முன்னாள் டி.ஜி.பி. ரவி பெயரில் மோசடி முயற்சி -போலீசார் விசாரணை
x

போலி முகநூல் மூலம் முன்னாள் டி.ஜி.பி. ரவியிடம் மோசடி முயற்சி நடந்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை,

தாம்பரம் போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் டி.ஜி.பி. ரவி. இவருக்கு நண்பர்கள் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு, உங்களது முகநூல் பக்கத்தில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட பர்னிச்சர் கடையில், நீங்கள் பர்னிச்சர் வாங்கியதாகவும், அவை தரமான, விலை குறைவானவை என்றும், குறிப்பிட்ட கடையில் பர்னிச்சர் பொருட்களை வாங்குங்கள் என்று நீங்கள் சிபாரிசு செய்ததைபோல, உங்கள் முகநூல் பக்கத்தில் தகவல் இருப்பதாகவும், கூறினார்கள்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவி, தான் அதுபோல தகவல் எதுவும் வெளியிடவில்லை, என்று நண்பர்களிடம் கூறி உள்ளார். பின்னர் அவரது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் போலியான முகநூல் பக்கத்தை தொடங்கி யாரோ மோசடி முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

புகார்-விசாரணை

உடனடியாக இது குறித்து ரவி, சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி, யாரோ மர்ம நபர்கள் இதுபோல் போலியான முகநூல் முகவரியை தொடங்கி மோசடி முயற்சியில் இறங்கி உள்ளனர் என்றும், நல்ல வேளையாக உடனடியாக எனது கவனத்திற்கு வந்ததால், பெரிய அளவில் நடக்க இருந்த மோசடி முயற்சி தடுக்கப்பட்டு விட்டது என்று டி.ஜி.பி. ரவி தெரிவித்தார்.


Next Story