கீழ்பவானி பாசன பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; வேளாண்மை குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


கீழ்பவானி பாசன பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; வேளாண்மை குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x

கீழ்பவானி பாசன பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வேளாண்மை குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு


கீழ்பவானி பாசன பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று வேளாண்மை குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வாய்க்காலில் உடைப்பு

வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போகத்துக்கான தண்ணீர் திறப்பு தேதியை மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு கரையோரங்களில் பனை மரங்களை நட வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் மட்டும் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இது எப்படி சாத்தியமாகும் என்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பவானிசாகர் அணைப்பகுதி, விவசாய நிலங்களில் தொழில்பேட்டைகள் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

கட்டுப்பாட்டு கருவி

மஞ்சள் வணிகவளாகம் அமைக்கப்படாமல் உள்ளதால் ஈரோட்டில் 4 இடங்களில் ஏலம் நடைபெற்று வருகின்றது. கால்நடைகளுக்கான அம்மை தடுப்பூசி மருந்து செலுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பவானி பாசன பகுதியில் அறுவடை பணிகள் தொடங்கி இருப்பதால் நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்க உத்தரவிட்டு உள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். விவசாய கிணறுகளில் மின்வாரியம் சார்பில் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. கோபி, பவானி, சத்தியமங்கலம், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், நிலங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்றுக்கூறி நிலத்தை விற்கவோ, வாங்கவோ முடியாமல் முடக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். வனப்பகுதியையொட்டி உள்ள பாதுகாக்கப்பட்ட இடத்தில் கல் குவாரிகள் தொடங்க 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அனுமதி கிடையாது. ஆனால் இந்த அனுமதியை ஒரு கிலோ மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.

சாயக்கழிவு

காலிங்கராயன் வாய்க்காலில் விடுபட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். சுண்ணாம்பு ஓடையில் சாயக்கழிவு அதிகமாக கலக்கப்படுவது தொடர் கதையாகி இருக்கிறது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிக்கப்படுவதில்லை. செயல்படாத அந்த துறையே தேவையில்லை. பவானி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது காலிங்கராயன் அணையில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் பயிர் கருகினாலும் பரவாயில்லை, தண்ணீர் வீணாக கடலில் சென்றாலும் பரவாயில்லை அரசு ஆணை இல்லாமல் தண்ணீர் திறக்க மாட்டோம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். மலைக்கிராமங்களில் செயற்கை உரங்களை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். கோதுமை தேவை அதிகமாக இருப்பதால் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு 10 கிலோ கோதுமை வழங்க வேண்டும்.

பாசன சபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பங்கு ஈவு தொகை வழங்கப்படாமல் உள்ளது. தடை செய்யப்பட்ட ரசாயன உரங்கள் தனியார் உர நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் ஏஜென்சிகளுக்கு தடை விதித்து அரசே மானிய விலையில் தரமான உரத்தை வழங்க வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களை ஒரு நாளுக்கு குறைந்தது 5 மணிநேரமாக விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். நாட்டு சர்க்கரையில் கலப்படம் செய்வதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். அதற்கு பதில் அளித்து அதிகாரிகள் விளக்கம் அளித்து பேசியபோது கூறியதாவது:-

நெல் கொள்முதல் நிலையம்

அரசாணையின்படி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும். அடுத்த முறை அரசாணை பெறும்போது தண்ணீர் திறப்பு தேதி நீட்டித்து பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. இதில் சர்வர் பாதிப்பு காரணமாக ஏலத்தில் தாமதம் ஏற்படுகிறது. எனவே தனி சர்வர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருங்கிணைந்த மஞ்சள் ஏலம் நடத்துவதற்கு சித்தோட்டில் 14 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

விவசாயிகள் 4, 5 ஆண்டுகளாக மஞ்சள் தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பச்சை மஞ்சளை வாங்குவதற்கு வியாபாரிகளிடம் பேசி வருகிறோம். கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் உள்ளது. அதற்காக தடுப்பூசி போடப்படுகிறது. விவசாயிகளுக்கு விரைவில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக விவசாய மின் இணைப்புக்கு கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படுகிறது. டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்படாமல் இருக்கவும், மின் மோட்டார் நீண்ட காலம் உழைக்கவும் இந்த கருவி பயன்படுகிறது. மேலும், ஒரே வரிசையில் பல்வேறு மின்மோட்டார்கள் இயங்கும்போது கடைசியில் உள்ள மின்மோட்டாருக்கும் சீரான மின்வினியோகம் கிடைக்கும். எனவே விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. ஆதார் எண் இணைக்கும் பணி 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பழைய மின் இணைப்பு எண் இல்லை என்றால் அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் இருக்கும். எனவே அழிந்த இடத்தில் மீண்டும் மின் இணைப்பு எண்ணை எழுதுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆதார் எண் இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து ஆகாது.

வக்பு வாரியம்

காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க திடீர் ஆய்வு நடத்தப்படுகிறது. கடந்த 10 நாட்களில் 6 பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. வக்பு வாரியத்தின் சார்பில் பழைய சர்வே எண்களை வைத்து கூறப்பட்டது. அந்த நிலத்தை தவிர மற்ற நிலங்களில் தற்போதைய சர்வே எண்களின் அடிப்படையில் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளோம்.

கீழ்பவானி வாய்க்காலில் முதல் போகத்துக்கு வருகிற 15-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்பிறகு மதகுகளை அடைப்பது போன்ற பராமரிப்பு பணிக்கு 10 நாட்கள் தேவைப்படுகிறது. மேலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் திறக்க பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story