கரும்பு அரவை பணி ஏப்ரல் மாதம் 2-வது வாரம் தொடங்கும்


கரும்பு அரவை பணி ஏப்ரல் மாதம் 2-வது வாரம் தொடங்கும்
x

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏப்ரல் மாதம் 2-வது வாரம் கரும்பு அரவை பணி தொடங்கும் என்று மேலாண்மை இயக்குனர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறினார்.

திருப்பூர்

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏப்ரல் மாதம் 2-வது வாரம் கரும்பு அரவை பணி தொடங்கும் என்று மேலாண்மை இயக்குனர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறினார்.

நெல் கொள்முதல் நிலையம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன், கூட்டுறவு இணை பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈஸ்வரமூர்த்தி (உழவர் உழைப்பாளர் கட்சி):-

தாராபுரத்தில் பழைய அமராவதி பாசன பகுதியில் நெல் அறுவடை பணி பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது. அதனால் தாராபுரம், அலங்கியத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் தொடங்க வேண்டும். புதிய, பழைய அமராவதி பாசனத்துக்கு வருகிற 7-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நெல் புடைபருவமாக இருப்பதால் வருகிற 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும்.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எந்திரங்களை பராமரிப்பு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு எந்திரங்கள் பழுது காரணமாக கரும்பு விவசாயிகளிடம் இருந்து முழு அளவில் கரும்பை கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முன்கூட்டியே ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கரும்பு அரவை பணியை தொடங்க வேண்டும்.

கரும்பு அரவை தொடங்கும்

சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறும்போது, 'அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வரும் ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் கரும்பு கொள்முதல் செய்ய விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இன்னும் 200 ஏக்கர் பதிவு செய்யப்பட உள்ளது. 62 ஆண்டுகள் பழமையான ஆலையில் எந்திரங்கள் பழுதடைந்துள்ளது. ரூ.10 கோடியில் எந்திரங்கள் சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. கரும்பை எந்திரத்தில் தள்ளுவதற்கு எந்திர உதவி மேம்படுத்தப்பட்டு உள்ளது. மார்ச் மாதத்துக்குள் இந்த சீரமைப்பு பணிகள் அனைத்தையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரும்பு வெட்டும் தொழிலாளர்களை முன்கூட்டியே அழைத்து வந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்' என்றார்.


Related Tags :
Next Story