மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இறந்தார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இறந்தார்.

முன்னாள் பஞ்சாயத்து தலைவர்

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தென்மலை பஞ்சாயத்து அருகன்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் ஜோதிமுருகன் (வயது 50). இவர் தென்மலை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆவார். தற்போது பஞ்சு, பருத்தி, நவதானியம் வியாபாரம் செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை அருகன்குளத்திற்கு கிழக்கே ராஜபாளையம்-நெல்லை நெடுஞ்சாலையில் முறம்பு பகுதியில் உள்ள தனது கடைக்கு சென்று விட்டு மீண்டும் அருகன்குளத்துக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கார் மோதியது

செந்தட்டியாபுரம் புதூர் விலக்கு பகுதியில் வந்தபோது சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த கோமதிநாயகம் மகன் ராதாகிருஷ்ணன் (25) என்பவர் அந்த வழியாக ராஜபாளையம் செல்ல கார் ஓட்டிக்கொண்டு வந்தார். அந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து ஜோதி முருகன் கீழே தூக்கி வீசப்பட்டார். இதில் அவருடைய தலை, காது, மூக்கு போன்றவற்றில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது.

சாவு

உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story