முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் கைது
ஓட்டப்பிடாரம் அருகே பத்திரப்பதிவுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே பத்திரப்பதிவுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவரை போலீசார் கைது செய்தனர்.
இடவிற்பனைக்கு எதிர்ப்பு
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் மேலமடம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி பொன்செல்வி. இவர்களுக்கு சுமன்ராஜ் என்ற மகனும், பாலசவுந்தரி, சசிபாலா, பொன்சுமதி என்ற மகள்களும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பாக முத்துராஜ் இறந்துவிட்டார். இதை அடுத்து முத்துராஜ் மனைவி பொன்செல்வி சுமன்ராஜ்வுடன் வசித்து வந்துள்ளார். சுமன்ராஜ் தனது வீட்டின் அருகே தந்தையின் பெயரில் உள்ள 33 சென்ட் இடத்தை விற்பதற்கு வீட்டில் உள்ள எல்லோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் மூத்த சகோதரி பாலசவுந்தரி மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
போலி ஆதார் அட்டை
இது குறித்து சுமன்ராஜ் ஓட்டப்பிடாரம் முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர் ஹரிஹரன் என்ற சாமி மற்றும் உலகையா இருவரும் உதவியுடன் பாலசவுந்தரி பெயரில் போலி ஆதார் அடையாள அட்டை முப்பிலிவெட்டி கிராமத்தை சேர்ந்த நட்டார் மனைவி ஒளிமுத்தமாள் என்பவருக்கு தயார் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 5-ந்தேதி ஓட்டப்பிடாரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய முயன்றனர். அப்போது சார்பதிவாளர் முத்துமாரியப்பன் ஆய்வு செய்த போது பாலசவுந்திரிக்கு பதில் முப்பிலிவெட்டி கிராமத்தை ஒளிமுத்தமாள் என்பவருக்கு போலி அடையாள அட்டை தயாரித்து ஆள்மாறட்டம் செய்து பத்திரபதிவு செய்ய முயன்றது தெரியவந்தது. இதை அடுத்து சார் பதிவாளர் ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் கொடுத்தார்.
முன்னாள் துணைதலைவர் கைது
இதன்பேரில் முத்துராஜ் மனைவி பொன்செல்வி, அவரது மகன் சுமன்ராஜ், மகள்கள் சசிபாலா, பொன்சுமதி, ஒளிமுத்தம்மாள், ஹரிஹரன் என்ற சாமி, உலகையா, செல்வராஜ் மற்றும் சுமன்ராஜ் கடையில் பணிபுரியும் புதியம்புத்தூரை சேர்ந்த கருப்பசாமி ஆகிய 9பேர் மீது ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து சுமன்ராஜ் மற்றும் கருப்பசாமி இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில், மற்றவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் ஹரிஹரன் என்ற சாமியை நேற்று கோவில்பட்டியில் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.