முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாமல்லபுரம் வருகை


முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாமல்லபுரம் வருகை
x

மாமல்லபுரம் வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புராதன சின்னங்களை பார்த்து ரசித்தார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை தந்தார். அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்.

முன்னதாக கடற்கரை கோவில் பகுதிக்கு வந்த அவரை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில் திருக்கழுக்குன்றம் துணை தாசில்தார் சையத்அலி, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் அனுராதா, மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ரகு, மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி உளளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

அவர் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு வளாகத்தில் உள்ள சிற்பங்களை சுற்றி பார்த்த போது அங்கு வடமாநில மற்றும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் முன்னாள் ஜனாதிபதி அருகில் நின்று புகைப்படம் எடுக்க பாதுகாப்பு அதிகாரிகள் விடுவார்களா? என்று அவர்கள் தயங்கி, தயங்கி நின்று கொண்டிருந்தனர். இதை தூரத்தில் நின்று கவனித்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், எனது அருகில் வாருங்கள் என அன்போடு அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி

அவர்களையும் செல்போனில் புகைப்படம் எடுக்க சொல்லி அனுமதி வழங்கினார். பாதுகாப்பு அதிகாரிகள் அருகில் விட மறுத்தாலும் முன்னாள் ஜனாதிபதி அன்போடு அருகில் அழைத்து புகைப்படம் எடுத்து கொள்ள அனுமதி வழங்கியது அவரது எளிமையை காட்டுவதாக சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சியோடு அவருக்கு நன்றி தெரிவித்தனர். அவருடன் வந்த இந்தி மொழி பேசும் மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி பாலகிருஷ்ணன், மாமல்லபுரம் குடைவரை சிற்பங்களின் வரலாற்று தகவல்களை ஆர்வமுடன் கூறினார். அவரும் மாமல்லபுரத்தை ஆண்ட பல்லவர்களின் வரலாற்று தகவல்கள் பற்றி ஒவ்வென்றாக ஆர்வமாக அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். பிறகு கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்தார். கடற்கரை கோவிலின் இரு கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டார். பிறகு அங்கு முகப்பு வாயிலில் உள்ள நந்தி சிலைகளையும் அவர் பார்வையிட்டார்.

வரலாற்று தகவல் பற்றிய கையேடு

சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் வரலாற்று தகவல் பற்றிய கையேடும் அவருக்கு வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி வருகையையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story