45 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய அரசு பள்ளிக்கூட முன்னாள் மாணவர்கள்
அரசு பள்ளிக்கூட மாணவர்கள் 30 பேர் 45 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக கூடினார்கள். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நீண்ட ஆயுள்பெற குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு செய்தனர்.
திருக்கடையூர்:
அரசு பள்ளிக்கூட மாணவர்கள் 30 பேர் 45 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக கூடினார்கள். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நீண்ட ஆயுள்பெற குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு செய்தனர்.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் தினந்தோறும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இங்கு மட்டுமே மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் உள்ளிட்ட சடங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்
இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சமத்தூர் ராம அய்யங்கார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1977-78-ல் படித்த எஸ்.எஸ்.எல்.சி. முன்னாள் மாணவர்கள் 30 பேர் 45 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடினார்கள்.
அவர்கள் அனைவரும் நீண்ட ஆயுள் பெற அங்கு சிறப்பு வழிபாடு (ஆயுள்விருத்தி ஹோமம்) செய்வதென முடிவு செய்தனர். அதன்படி அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.
சிறப்பு வழிபாடு
இதற்காக நேற்று கோவில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் 160 கலசங்கள் வைக்கப்பட்டு 10 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் யாக குண்டத்தின் முன்பு அமர்ந்து தங்களது ஆயுள் விருத்திக்காக (சஷ்டியப்த பூர்த்தி) சிறப்பு வழிபாடு செய்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் மாணவர்கள் 30 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பக்தர்கள் என சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.