ஆசிரியருக்கு ரூ.10 லட்சத்தில் காரை பரிசாக வழங்கிய முன்னாள் மாணவர்கள்
ஆசிரியருக்கு ரூ.10 லட்சத்தில் காரை பரிசாக முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே பஞ்சந்திக்குளம் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் தமிழொளி. தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றிய இவர் கடந்த மாதம் ஓய்வுபெற்றார். இவர் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை தேர்வில் தோல்வி அடைந்த மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக தனி பயிற்சி மையம் தொடங்கினார். இதில் படித்தவர்கள் பலர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் இவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் தமிழொளிக்கு பஞ்சநதிக்குளம் ராமசாமி பெருமாள் கோவிலில் பாராட்டு விழா நடத்தினர். விழாவுக்கு தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுருபாண்டியன், தேர்தல் துணை தாசில்தார் வேதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்ளாள் மாணவர்கள் சார்பாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை பரிசதாக வழங்கினார். ஆசிரியர் சிறப்பு மலரை வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் மதியழகன் வெளியிட்டார். இதை ஓய்வு பெற்ற அகில இந்திய வாணொலி நிகழ்ச்சி இயக்குனர் நடராஜன் பெற்றுக்கொண்டார். விழாவில் கவிஞர் நந்தலாலா மற்றும் முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி மூலிகை மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டது. முடிவில் ஆசிரியர் மணிமொழி நன்றி கூறினார்.