அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட வேண்டும்; விவசாயிகள் மனு
ஆயக்குடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்த விவசாயிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கரிகாலன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், பழனி தாலுகா ஆயக்குடி கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு கொய்யா, மா, தென்னை, வாழை, எலுமிச்சை, மக்காச்சோளம் ஆகியவை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 5 காட்டு யானைகள், வனத்தில் இருந்து வெளியேறி விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாய வேலைக்கு செல்வோரை யானைகள் துரத்துகின்றன.
மேலும் கொய்யா பழங்கள் மரத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எங்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் வாழ்ந்து வருகிறோம். எனவே ஆயக்குடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் அல்லது யானைகளை பிடித்து முதுமலை சரணாலயத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.