தருமபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படுமா?
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
உழவர் சந்தை
இந்தியாவில் சுமார் 70 சதவீத மக்கள் விவசாய தொழிலை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரமான உணவை வழங்கும் விவசாய தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியால் 1999-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது தான் உழவர் சந்தை திட்டம்.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், கீரைகளை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் மக்களிடம் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் நேரடியாக விற்பனை செய்து லாபம் அடைய வேண்டும். இதேபோல் மக்களும் மனநிறைவை பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
5 இடங்கள்
இதன் ஒரு பகுதியாக தர்மபுரியில் கடந்த 11.11.2000-ம் ஆண்டில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து தர்மபுரி ஏ.ஜெட்டி அள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் ஆகிய பகுதிகள் உள்பட 5 இடங்களில் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு செயல்படுகின்றன. உழவர் சந்தைகளுக்கு அதிகாலை 4 மணிக்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி, பழங்களை கொண்டு வருகிரார்கள். காலை 5 மணிக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. காலை 6 மணிக்கு தொடங்கும் விற்பனை மதியம் 12 மணி வரை நடக்கிறது.
தர்மபுரி உழவர் சந்தை நிர்வாக அலுவலர், 2 உதவி நிர்வாக அலுவலர்கள், 3 வாட்ச்மேன், 1 துப்புரவு பணியாளர் என நிரந்தர பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி உழவர் சந்தையில் 72 கடைகள் செயல்பட்டு வருகின்றன. திறந்த வெளியில் 40 கடைகள் செயல்படுகின்றன. இந்த உழவர் சந்தைக்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள்.
விற்பனை
ஒரு நாளில் சராசரியாக 18 டன் காய்கறிகள், 2 டன் பழங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. அமாவாசை, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் பண்டிகை காலங்களில் சுமார் 40 டன் முதல் 50 டன் வரை இங்கு காய்கறிகள் விற்பனை ஆகின்றன.
இதேபோல் தர்மபுரி ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் 24 கடைகள் செயல்படுகின்றன. சுமார் 20 கடைகள் திறந்த வெளியில் செயல்படுகின்றன. இங்கு சராசரியாக 8 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் 10 டன் வரை காய்கறிகள் விற்பனையாகின்றன.
அடிப்படை வசதிகள்
இதேபோல் அரூர், பென்னாகரம் பாலக்கோடு, உழவர் சந்தைகள் தலா 24 கடைகளுடன் செயல்படுகின்றன. இந்த உழவர் சந்தைகளுக்கு சாதாரண நாட்களில் 500 முதல் 750 வாடிக்கையாளர்கள் வந்து செல்கிறார்கள். அமாவாசை, புரட்டாசி சனிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இந்த உழவர் சந்தைகளுக்கு 1,000 முதல் 1,500 வாடிக்கையாளர்கள் வந்து செல்கிறார்கள். அத்தகைய நாட்களில் 10 டன் வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனிடையே உழவர் சந்தைகளில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகள் குறித்து காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகள், அவற்றை வாங்கி செல்லும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கூடுதல் டவுன் பஸ்கள்
தர்மபுரி வன்னியகுளத்தை சேர்ந்த விவசாயி முருகேசன்:
தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை மற்றும் பழங்கள் விற்பனை நன்றாக நடக்கிறது. இந்த உழவர் சந்தைக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய நேரங்களை பயன்படுத்தி காய்கறிகள், பழங்களை சிலர் திருடி சென்று விடும் சூழல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த தர்மபுரி உழவர் சந்தை மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.