விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
x

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூரில் உழவர் சந்தையில் சாலையோர கடைகளை அகற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாதுகாப்பு தர வலியுறுத்தி வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

திருப்பூரில் தெற்கு உழவர் சந்தை பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியிலும், வடக்கு உழவர் சந்தை புதிய பஸ் நிலையம் பின்புறமும் செயல்பட்டு வருகிறது. அங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியூர்களில் இருந்து காய்கறிகளை வாங்கி வரும் வியாபாரிகள் தெற்கு உழவர் சந்தை அருகே பல்லடம் சாலையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டு, பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் மீண்டும் அங்கு சாலையோர கடைகள் இருப்பதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேற்று காலை தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது ஆக்கிரமிப்பு சாலையோர கடைகள் அகற்றப்படாவிட்டால் விவசாயிகளே நேரடியாக அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள், இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதேபோல் வடக்கு உழவர் சந்தை அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வியாபாரிகள்

இந்த நிலையில் மாநகராட்சி விதிகளுக்குட்பட்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு இடையூறு செய்பவர்களை கண்டித்து திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு. சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் பல்லடம் ரோட்டில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது அரசின் அரசாணையின்படி சந்தை அமைந்துள்ள இடத்திற்கு 100 மீட்டர் தொலைவில், மாநகராட்சி விதிகளுக்குட்பட்டு வியாபாரிகள் சாலையோர கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதாகவும், ஆனால் விவசாயிகள் என்ற பெயரில் தொடர்ந்து தங்கள் வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

-


Related Tags :
Next Story