மடத்துக்குளம் அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
மடத்துக்குளம் அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
திருப்பூர்,
மடத்துக்குளம் அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கி விவசாயிகளிடம் மனுக்களை பெற்றார். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து முறையிட்டனர்.
மதுசூதனன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) :-
மடத்துக்குளம் தாலுகா சங்கராமநல்லூர் அணைக்கட்டு அமராவதி ஆற்றுப்படுகையிலும், குதிரையாறு ஆற்று நீர்வழிப்பாதையில் கொழுமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார்கள். ஆற்று நீர்வழிப்பாதையை 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பூமிக்கு விவசாய பணிக்கு செல்வதற்கும், அறுவடை செய்யும் பொருட்களை எடுத்து செல்லவும் தடவழிப்பாதையாக பயன்படுத்தி வருகிறார்கள். நீர்வழிப்பாதை தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதால் விவசாயிகள் பாதையின்றி சிரமப்படுகிறார்கள். எனவே நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாதை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
உடுமலை ஆண்டியக்கவுண்டனூர் கிராமத்தில் 25 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை பன்னாட்டு முட்டை கோழிப்பண்ணை நிறுவனத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை மீட்டு ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். ஆத்துக்கிணத்துப்பட்டியில் 123 ஏக்கர் நிலம் உபரி நிலமாக அறிவித்து 116 பேர்களுக்கு நில ஒப்படைப்பு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அந்த நிலத்தை சிலர் 10 ஏக்கர், 20 ஏக்கர் என பிரித்து அனுபவித்து வருகிறார்கள். நிலத்தை ஏழை, நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
போலி விதைகள்
பரமசிவம் (தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்) :-
தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறையின் மூலமாக கடந்த ஒரு வருடகாலமாக விவசாயிகள் பயிரிடும் மிளகாய், தக்காளி, பப்பாளி நாற்றுகள் வைரஸ் தாக்குதலால் விளைச்சல் குறைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையில் இருந்து எந்த விதமான ஆய்வும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. போலி விதைகள் வாங்கி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கள ஆய்வு செய்து உரிய மருந்து மற்றும் உரங்களை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். விதை விற்பனை நிலையங்களை மாதம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்.
கல்குவாரியில் அளவீடு
சதீஷ்குமார் (தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்):-
திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரி அனுமதி வேண்டி வரும் புலங்களில் கள ஆய்வு உண்மை நிலை அறிக்கையை வைக்க வேண்டும். கல் குவாரிகளில் அனுமதித்ததை விட பல மடங்கு அதிகமாக கனிமத்தை வெட்டி எடுத்து மீண்டும் அனுமதி கேட்பதும், மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குவதும் சட்டவிரோத கல்குவாரி செயல்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பதை போல் அமையும். எனவே கல்குவாரியின் உண்மையான ஆழ, அகல, நீளத்தை அளவீடு செய்து அறிக்கை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் கல்குவாரி அனுமதிக்கான முடிவை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
----