விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர்

திருப்பூர்

உழவர் சந்தைகளுக்கு முன்பு சாலையோர காய்கறி கடைகளை அகற்றக்கோரி விவசாயிகள் நேற்று திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு உழவர் சந்தைகள், திருப்பூர் மாநகராட்சி காய்கறி சந்தை ஆகியவற்றில் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஈசன் தலைமையில் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக வளாகத்துக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் வடக்கு போலீசார் ஈடுபட்டனர்.

சப்-கலெக்டரிடம் கோரிக்கைகளை முறையிட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் வாசுகுமார், செல்வநாயகம், தங்கவேல்ராஜன், உழவர் சந்தை அதிகாரிகள், காவல்துறையினர் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முக்கிய நிர்வாகிகளை மட்டும் சப்-கலெக்டரிடம் முறையிட வருமாறு கூறினார்கள். ஆனால் விவசாயிகள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நடவடிக்கை இல்லை

பின்னர் சப்-கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்த அனைத்து விவசாயிகளும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. விவசாயிகள் தரப்பில் பேசியாவது:-

திருப்பூர் வடக்கு, தெற்கு உழவர் சந்தைகளுக்கு வரும் வழியில், சந்தைகளுக்கு முன்பு சட்டவிரோதமாக நடைபெற்று வரும் சாலையோர காய்கறி கடைகளை தடை செய்து திருப்பூர் ஆர்.டி.ஓ.உத்தரவிட்டார். இதுவரை அமல்படுத்தப்படவில்லை. நகராட்சிகள் இயக்குனரின் உத்தரவுப்படி உழவர் சந்தை நடக்கும் நேரத்தில் அந்த பகுதியில் செயல்படும் அனைத்து காய்கறி கடைகளையும் மூட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதையும் செயல்படுத்தவில்லை.

உழவர் சந்தை அருகே வியாபாரிகள் வியாபாரம் செய்வது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தினசரி காய்கறி சந்தையில் உழவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நிரந்தர தீர்வு

சப்-கலெக்டர் 'குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் குறிப்பிட்டு சொல்லுங்கள்' என்றார். ஆனால் விவசாயிகள் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியதால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உழவர் சந்தை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று சப்-கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து சமாதானமாகி அனைவருக்கும் அங்கிருந்து புறப்பட்டனர்.



Next Story